சிறைக் கைதி மர்ம மரண வழக்கு: காவல் உதவி ஆய்வாளர் சரண்

புதுச்சேரியில் சிறைக் கைதி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்குத் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட

புதுச்சேரியில் சிறைக் கைதி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்குத் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் போலீஸில் சனிக்கிழமை இரவு சரணடைந்தார்.
கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர், புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (26). கடந்தாண்டு, 
நவ. 21 -ஆம் தேதி பைக் திருட்டு வழக்கில் இவரை கைது செய்த பாகூர் போலீஸார், காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். அங்கு, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயமூர்த்தி, நவம்பர் 27 -ஆம் தேதி இறந்தார்.
இதுகுறித்து காலாப்பட்டு போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்த வழக்குத் தொடர்பாக, பாகூர் காவல் உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன், சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் திருமால் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனிடையே, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார், காவல் உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன், சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறை மருத்துவர் வெங்கடரமண நாயக் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனர். 
உயிரிழந்தவர் எஸ்.சி. வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கு வன்கொடுமைத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனிடையே, சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த 20 -ஆம் தேதி புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்த சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய காவல் உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதனை போலீஸார் தேடி வந்தனர். 
இந்த நிலையில், அவர் கோரிமேட்டில் உள்ள வன்கொடுமைத் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் எஸ்.பி. பாலகிருஷ்ணனிடம் சனிக்கிழமை இரவு சரணடைந்தார். அவரை போலீஸார், புதுச்சேரி நீதிமன்ற நீதிபதி சுபா அன்புமணி வீட்டில் நேரில் ஆஜர்படுத்தினர். 
வழக்கை விசாரித்த நீதிபதி, காவல் உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதனை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸார் அவரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறை மருத்துவர் வெங்கடரமண நாயக், பாகூர் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் திருமால் ஆகியோரை கைது செய்ய தீவிரமாக முயன்று வருவதாக வன்கொடுமைத் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com