நீர் மேலாண்மைத் துறையை ஏற்படுத்த முன்னாள் எம்.பி. வலியுறுத்தல்

புதுவையில் தனியாக நீர் மேலாண்மைத் துறையை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ் வலியுறுத்தினார்.

புதுவையில் தனியாக நீர் மேலாண்மைத் துறையை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாட்டில் தற்போது நிலவும் தண்ணீர் பஞ்சத்தைப் போக்குவதற்காகவும், அதன் காரணங்களைப் புரிந்து கொள்வதற்காகவும், மத்திய அரசின் நீதி ஆயோக், மத்திய நீர்வள அமைச்சகம், ஊரக வளர்ச்சித் துறை ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வின் தரவரிசையில் புதுவை மாநிலம் 21 -ஆவது இடத்தில் உள்ளது.
தரவரிசையில் பின்தங்கியதற்கு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள நீர்வளங்களையும், அதன் கட்டமைப்புகளையும் மேலாண்மை செய்வதில் அரசின் திறமை
யின்மையை காட்டுகிறது. இங்கு, தேவைக்குத் தகுந்தவாறு நீர் அளிப்பின் அளவு சமமாக இருந்த போதும், நீர்வளத்தைச் சரியாகப் பராமரிக்காததாலும், அதைச் சரிவர மேலாண்மை செய்யாததாலும் தரவரிசை குறைந்திருக்கலாம். எனவே, புதுவை அரசு இந்த அறிக்கையை நன்கு படித்து, அதில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் மற்றும் கருத்துகள் சரியானவையா அல்லது குறைபாடு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
புதுவை அரசு உடனடியாக நீர்
அளிப்பு மற்றும் மேலாண்மைத் துறை என்ற ஒரு புதிய துறையையும், நீர் வளங்கள் குறித்த புள்ளி விவரங்களுக்கான ஒரு ஒருங்கிணைந்த தரவுத்தளம் ஒன்றையும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள பொதுப் பணித் துறை மிக முக்கியமான நீர் மேலாண்மையைக் கையாள முடியாது என்பதால்தான் ஒரு தனித் துறை அவசியமாகிறது.
இந்தத் துறைக்கு நீர்வளத் துறையில் அனுபவம் வாய்ந்த, புதுச்சேரியின் சூழ்நிலையை நன்கு புரிந்த ஒரு நிபுணரைத் தலைவராக நியமிக்க வேண்டும். காரைக்கால் மற்றும் புதுச்சேரி பிராந்தியங்களில் நீர் மேலாண்மைக் குழுக்களையும் நீர் உபயோகிப்பாளர் சங்கங்களையும் நிறுவ வேண்டும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து காக்க வேண்டும்.
புதுச்சேரியில் உள்ள நீர்வளம்தான் நமது எதிர்கால பொருளாதார, சமூக வளர்ச்சியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். எனவே, வருமுன் காப்போம் என்ற தத்துவத்தின் அடிப்படையில், புதுவை அரசு போர்க்கால நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அப்போதுதான் அடுத்த ஆண்டாவது நீதி ஆயோக்கின் தரவரிசைப் பட்டியலில் புதுச்சேரி முன்னிலை வகிக்க முடியும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com