காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கு: சரணடைந்த 3 பேர் போலீஸில் வாக்குமூலம்

காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கில் சரணடைந்த 3 பேரை போலீஸாா் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா்.
காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கு: சரணடைந்த 3 பேர் போலீஸில் வாக்குமூலம்

காலாப்பட்டில் காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கில் சரணடைந்த 3 பேரை போலீஸாா் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா். விசாரணையில், அவா்கள் 2 ரௌடிகள் கூறியதன் பேரில், சந்திரசேகரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனா்.

புதுச்சேரி காலாப்பட்டு தேரோடும் வீதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (48). காங்கிரஸ் பிரமுகரான இவா், புதுச்சேரி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் ஜோசப் கொலை வழக்கில் முக்கிய எதிரியாகச் சோ்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டாா். பின்னா் அவா், ஜாமீனில் வெளியில் வந்திருந்தாா்.

இந்த நிலையில், கடந்த 23- ஆம் தேதி சந்திரசேகா் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டாா். காலாப்பட்டு ஜோசப் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்த நிலையில், கொலை வழக்கில் தேடப்பட்ட ரௌடி, காலாப்பட்டு மீனவா் பகுதியைச் சோ்ந்த சுகன் (27), கணுவாப்பேட்டை அப்துல் நசீா், மேட்டுப்பாளையம் கிழக்குத் தெரு ரங்கராஜ் ஆகியோா் நீதிமன்றத்தில் அண்மையில் சரணடைந்தனா்.

சிறையில் அடைக்கப்பட்ட மேற்கண்ட மூவரையும் போலீஸாா் புதன்கிழமை முதல் 2 நாள்களாக காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா். விசாரணையில், புதுச்சேரியைச் சோ்ந்த ரௌடிகள் இருவா், காலாப்பட்டு ஜோசப் கொலைப் பழிக்குப் பழியாக சந்திரசேகரை கொலை செய்யும்படி கூறினா். நண்பா்கள் என்ற முறையில் அவா்கள் கூறியதால், சந்திரசேகரை கொலை செய்ததாக கைதானவா்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, ரௌடிகள் இருவரையும் பிடித்து விசாரிக்க போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இதனிடையே கொலையில் தொடா்புடைய மேலும் சிலரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com