காமராஜர்நகர் தொகுதி இடைத் தேர்தல்: காங்கிரஸ் சார்பில் ஜான்குமார் போட்டி

புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஏ.ஜான்குமார் போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் முகுல்வாஸ்னிக்  தெரிவித்தார்.

புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஏ.ஜான்குமார் போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் முகுல்வாஸ்னிக்  தெரிவித்தார்.
புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கு அக். 21-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-இல் தொடங்கியது. திங்கள்கிழமையுடன் (செப். 30) வேட்புமனு தாக்கல் முடிகிறது.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமார், புதுவை மாநில காங்கிரஸ் உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்ட 11 பேர் மனு அளித்தனர்.
விருப்ப மனு அளித்தவர்களிடம் காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் நேர்காணல் நடத்தினர். இதனிடையே, வேட்பாளரை இறுதி செய்ய முதல்வர் வே.நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் ஆகியோர் கடந்த 25-ஆம் தேதி தில்லிக்குச் சென்றனர்.
கடந்த 3 நாள்களாக அவர்கள் அங்கு முகாமிட்டிருந்தனர். இந்த நிலையில், காமராஜர்நகர் தொகுதிக்கான வேட்பாளராக ஜான்குமார் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டார். அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலின் பேரில், இதற்கான அறிவிப்பை கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் முகுல்வாஸ்னிக் வெளியிட்டார்.
காமராஜர் நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜான்குமார் நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர். 5.7. 1964-இல் பிறந்த இவர், பிபிஏ பட்டதாரி. இவரது மனைவி பெயர் ஜஸ்டின். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
மனை வணிக (ரியல் எஸ்டேட்) தொழில், கேபிள் டிவி,  சுற்றுலா நிறுவனம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார். மேலும், புதுச்சேரி கேபிள் டி.வி. சங்கத் தலைவராகவும், புதுவை கால்பந்து சங்கத் தலைவராகவும் இருந்து வருகிறார்.  புதுவை மாநில காங்கிரஸ் பொதுச் செயலராக உள்ள ஜான்குமார், ஏற்கெனவே எம்.எல்.ஏ.வாகவும், தில்லி சிறப்புப் பிரதிநிதியாகவும், துணை மேயராகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு 12,141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். முதல்வர் நாராயணசாமிக்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ஜான்குமார் ராஜிநாமா செய்தார்.
காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜான்குமார் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்கள் மீதும், அரசின் செயல்பாடுகளின் மீதும் உள்ள நம்பிக்கை தன்னை வெற்றி பெறச் செய்யும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com