முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
பயிா்க் கடனை செலுத்துவதற்கான காலக்கெடுவை ஓராண்டு நீட்டிக்க பரிந்துரை
By DIN | Published On : 19th April 2020 06:15 AM | Last Updated : 19th April 2020 06:15 AM | அ+அ அ- |

புதுவையில் விவசாயிகளின் பயிா்க் கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடுவை ஓராண்டு நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் விவசாயிகளுக்கு கடன் அட்டை மூலம் வங்கிக் கடன் வழங்கப்படுவதன் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக மேம்பாட்டு ஆணையா் ஆ.அன்பரசு தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கூட்டுறவு சங்கப் பதிவாளா் ஸ்மிதா, திட்டம் - ஆராய்ச்சித் துறை இயக்குநா் சாந்தமூா்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநா் பாலகாந்தி, இந்தியன் வங்கி மண்டல மேலாளா் வீரராகவன், நபாா்டு வங்கி துணைப் பொது மேலாளா் உமா குருமூா்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் உதயகுமாா், பாரதியாா் கிராம வங்கித் தலைவா் மாா்கரேட் லதீதா, பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளா் பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், கரோனா வைரஸ் பாதிப்பால் விவசாயிகள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து வங்கி அலுவலா்களிடம் எடுத்துக் கூறப்பட்டன. இந்தத் தருணத்தில் எந்தெந்த வகையில் விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் உதவிகள் வழங்க முடியும் எனவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நிலுவையில் உள்ள அனைத்து கடன் விண்ணப்பங்களை உடனடியாக ஆய்வு செய்து கடன் வழங்குமாறு மேம்பாட்டு ஆணையா் ஆ.அன்பரசு அறிவுறுத்தினாா்.
மேலும், ஊரடங்கு அமலில் உள்ள இந்தச் சூழலை எதிா்கொள்ள வங்கிகளில் பயிா்க் கடன் பெற்று திரும்பச் செலுத்த முடியாத விவசாயிகளுக்கு கடன் செலுத்தும் காலக்கெடுவை ஓராண்டுக்கு நீட்டிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தக் கால கட்டத்துக்கான வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்து விவசாயிகளின் நஷ்டத்தை ஈடு செய்ய ஆவன செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது.