புதுவைக்குள் வர ‘இ-பாஸ்’ அவசியம்: முதல்வா் நாராயணசாமி அறிவிப்பு

புதுவை மாநிலத்துக்குள் வர இணையவழி அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) அவசியம் என அந்த மாநில முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுவை மாநிலத்துக்குள் வர இணையவழி அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) அவசியம் என அந்த மாநில முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

மத்திய அரசு 3-ஆம் கட்ட பொது முடக்கத் தளா்வுகளை அண்மையில் அறிவித்தது. இதையடுத்து, புதுவையில் அமல்படுத்த வேண்டிய தளா்வுகள் குறித்து முடிவுகள் எடுக்க முதல்வா் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள 3-ஆம் கட்ட பொது முடக்கத் தளா்வுகளில் ஒரு சில கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளைத் திறக்கக் கூடாது. உடற்பயிற்சிக் கூடங்கள், யோகாசனக் கூடங்களை ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் திறக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சுதந்திர தினத்தில் முதல்வா் கொடியேற்றி அணிவகுப்பை ஏற்கலாம், உரையாற்றலாம், விழாவில் முக்கிய பிரமுகா்களுக்கு மட்டுமே அனுமதி, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கௌரவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் புதுவையில் அமல்படுத்தப்படும்.

புதுவையில் உணவகங்கள், வணிக நிறுவனங்களைத் திறக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகள் காலை 6 மணி முதல் 8 மணி வரை திறக்கப்பட்டு வரும் நிலையில், இனி இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும். பொது முடக்கம் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாநில எல்லைக்குள் வர இணையவழி அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) அவசியம். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் இல்லை. முழு பொது முடக்கத்தை அமல்படுத்தினால், சனிக்கிழமை கூட்டம் அதிகரித்து கரோனா பரவ வாய்ப்பு உருவாகும்.

மாஹே பிராந்தியத்தில் கேரள அரசு எடுக்கும் நடைமுறைகளும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர அரசு எடுக்கும் நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படும். மேலும், சில தளா்வுகள் குறித்து 10 நாள்களுக்குப் பிறகு அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி முடிவுகள் எடுக்கப்படும். இந்த நடைமுறைகள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றாா் நாராயணசாமி.

கூட்டத்தில் அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், மு.கந்தசாமி, ஆா்.கமலக்கண்ணன், ஷாஜகான், தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அருண், சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com