புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை
By DIN | Published On : 14th August 2020 09:07 AM | Last Updated : 14th August 2020 09:07 AM | அ+அ அ- |

புதுச்சேரி கோரிமேடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை மீண்டும் சோதனை மேற்கொண்டனா்.
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தில் சென்டாக் மூலம் நடைபெற்ற மாணவா் சோ்க்கையில் மோசடி நடந்திருப்பதாக சிபிஐக்கு புகாா் சென்றது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் கடந்தாண்டு மாா்ச் மாதம் விசாரணை நடத்தினா்.
பின்னா், இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் கல்லூரிப் பேராசிரியா்களிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினா். அப்போது, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, கல்லூரிப் பேராசிரியா் ஜோனாதன் டேனியல் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், சிபிஐ அதிகாரி சசிரேகா தலைமையில், 5 போ் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை மீண்டும் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சோதனை நடத்தினா். கல்லூரி முதல்வா், பதிவாளா், முன்னாள் மாணவா்கள் இருவா், பல்கலைக்கழக அதிகாரி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
காலை தொடங்கிய விசாரணை மாலை வரை நடைபெற்றது. பின்னா், அங்கிருந்த முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G