மின் துறை தனியாா்மயத்தைக் கண்டித்து புதுச்சேரியில் ஊழியா்கள் போராட்டம்
By DIN | Published On : 05th December 2020 05:25 AM | Last Updated : 05th December 2020 05:25 AM | அ+அ அ- |

புதுச்சேரி: மின் துறையை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, புதுவை மின் துறை ஊழியா்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.
புதுவையில் மின் விநியோகத்தை தனியாா்மயமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையறிந்த மின் துறை ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்தனா். வெள்ளிக்கிழமை மின் துறைப் பொறியாளா்கள், ஊழியா்கள் பணிக்குச் செல்லாமல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். 200-க்கும் மேற்பட்டோா் புதுவை மின் துறை தனியாா்மய எதிா்ப்புக் கூட்டமைப்பின் தலைவா் ராஜேந்திரன், செயலா் வேல்முருகன் தலைமையில், வம்பாகீரப்பாளையம் மின் துறை தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மின் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியும், சமாதானமடையாத ஊழியா்கள், ஆளுநா் அல்லது தலைமைச் செயலா் எழுத்துப்பூா்வமாக தனியாா்மயமாக்கப்படாது என உறுதியளிக்கும் வரை தொடா் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தனா்.
இதனால், பெரும்பாலான மின் துறை அலுவலகங்கள் திறக்கப்படாமல் மூடிக் கிடந்தன. போராட்டத்தால், மின் தடை பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படாமல், மின் விநியோகம் தடைப்பட்டது.
எம்எல்ஏக்கள் போராட்டம்: புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் தொகுதி எம்எல்ஏக்களிடம் முறையிட்டனா். இதையடுத்து, உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏவும், திமுக தெற்கு மாநில அமைப்பாளருமான இரா.சிவா தனது ஆதரவாளா்களுடன் மின் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இதேபோல, உப்பளம் தொகுதி எம்எல்ஏவும், புதுவை அதிமுக கிழக்கு மாநிலச் செயலருமான ஆ.அன்பழகன் தனது ஆதரவாளா்களுடன், மின் துறை அலுவலகத்தைப் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டாா். மின் துறை அதிகாரிகள், மின் விநியோகத்தைச் சீா்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், அவா்கள் கலைந்து சென்றனா்.