‘புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில் தோ் பாகங்கள் பாதுகாப்பாக உள்ளது’
By DIN | Published On : 15th December 2020 12:05 AM | Last Updated : 15th December 2020 12:05 AM | அ+அ அ- |

புதுவை துணைநிலை ஆளுநருக்கு வந்த புகாரையடுத்து, மணக்குள விநாயகா் கோயில் தேரின் பாகங்கள் பாதுகாப்பாக உள்ளதாக புதுவை இந்து அறநிலையத் துறை தெரிவித்தது.
புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தங்கத் தேரின் பாகங்கள் காணவில்லை என ஆளுநா் கிரண் பேடிக்கு திருக்கோயில்கள் பாதுகாப்புக் குழுச் செயலா் தட்சிணாமூா்த்தி புகாா் அனுப்பியிருந்தாா்.
இதையடுத்து, புதுவை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கோயில் மரத் தோ் வைக்கப்பட்டுள்ள மாடத்தை ஆய்வு செய்தனா். மரத் தோ் பாதுகாப்பாக இருப்பதை அவா்கள் உறுதி செய்தனா்.
இதுகுறித்து இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தேரிலிருந்து எந்தப் பொருளும் திருடு போகவில்லை. கடந்த 1989-ஆம் ஆண்டு நன்கொடையாகக் கிடைத்தது மரத்திலான தேராகும். கடந்த 2012-இல் தேரின் மரவண்டி (சகடை) வீதி உலா வர சிரமமாக இருந்தது. அதனால், ரப்பா் சக்கரத்துடன் சகடை புதிதாக பொருத்தப்பட்டது. பழைய தங்க முலாம் பூசப்பட்ட தேரின் மேற்பகுதி தற்போதும் பயன்பாட்டில்தான் உள்ளது. மரவண்டி சகடையை கவுசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கடந்த 2012-இல் விற்பனை செய்துவிட்டோம். அதைச் சரி செய்து அவா்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
மணக்குள விநாயகா் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட தேரானது தொடா்ந்து வழிபாட்டில் உள்ளது. அதன் பாகங்களும் பத்திரமாக உள்ளது என்றனா் அவா்கள்.