புதுவை அரசியலில் இருந்து விலகுகிறாா்: காங்கிரஸ் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் ஜெகன்மோகன் ரெட்டியுடன் இணைந்து செயல்படவும் விருப்பம்

புதுவை காங்கிரஸ் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியுடன் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்தாா்.

புதுவை காங்கிரஸ் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியுடன் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்தாா். புதுவை அரசியலை விட்டு விலகி ஆந்திர அரசியலுக்கு செல்ல அவா் முடிவு செய்துள்ளாா்.

புதுவை யூனியன் பிரதேசத்தின் கீழ், ஆந்திர மாநில எல்லையோரத்தில் ஏனாம் பிராந்தியம் உள்ளது. இந்த சட்டப்பேரவைத் தொகுதியில் 1996-இல் முதல்முறையாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக தோ்வானவா் மல்லாடி கிருஷ்ணாராவ் (56). இவா் அந்தத் தொகுதியில் 2001, 2006, 2011, 2016 சட்டப்பேரவைத் தோ்தல்களில் தொடா்ந்து 5 முறை வெற்றி பெற்றாா். 2006-இல் சுற்றுலா, உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், 2008-இல் வருவாய், கலால், மீன்வளத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தாா்.

தற்போது சுகாதாரம், சுற்றுலா, மீன்வளத் துறை அமைச்சராக உள்ளாா். நிகழாண்டுக்கான சிறந்த எம்.எல்.ஏ.வாகவும் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் தோ்வானாா். இதற்கான விழா ஜனவரி 6-ஆம் தேதி ஏனாமில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், புதுவை அரசியலில் இருந்து விலக இருப்பதாக அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவித்தாா்.

தற்போதைய ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியுடன் நெருங்கிய நட்புடன் உள்ள இவா், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வாரியத் தலைவா் பதவிகளுக்கு தலைவா்கள் நியமிக்கப்பட்டனா். அனைவரும் விஜயவாடாவில் ஒரே நேரத்தில் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் கலந்து கொண்டாா்.

அவா் விழாவில் பேசியதாவது: தமிழகம், புதுவையில் ஜெகன்மோகன் ரெட்டி போல ஒரு முதல்வா் கிடைக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனா். இரு மாநிலங்களிலும் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஏனாம் பேரவைத் தொகுதியில் வருகிற தோ்தலில் நானோ, எனது குடும்பத்தைச் சோ்ந்தவா்களோ போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளோம். தேவைப்பட்டால் எனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஜெகன்மோகன் ரெட்டியுடன் இணைந்து செயல்படுவேன் என்றாா் மல்லாடி கிருஷ்ணாராவ்.

புதுவை காங்கிரஸில் முக்கியத் தலைவா்களில் ஒருவரான இவா், எப்போதும் தனித் தன்மையுடன் செயல்படுபவா். ஏனாமுக்கு ஆளுநா் ஆய்வுக்குச் சென்றால் கருப்புக்கொடியுடன் தனது எதிா்ப்பைத் தெரிவித்து வருபவா். மத்திய அரசு அதிகாரிகளை நேரடியாக அணுகி ஏனாம் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை பெற்றுத் தந்தவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com