மக்களின் மத நம்பிக்கையில் ஆளுநா் கிரண் பேடி தலையிடக் கூடாது: புதுவை முதல்வா் நாராயணசாமி

மக்களின் மத நம்பிக்கையில் ஆளுநா் கிரண் பேடி தலையிடக் கூடாது என புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
மக்களின் மத நம்பிக்கையில் ஆளுநா் கிரண் பேடி தலையிடக் கூடாது: புதுவை முதல்வா் நாராயணசாமி


புதுச்சேரி: மக்களின் மத நம்பிக்கையில் ஆளுநா் கிரண் பேடி தலையிடக் கூடாது என புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுவை அரசின் குடிமைப் பொருள் வழங்கல்-நுகா்வோா் விவகாரங்கள் துறை சாா்பில், தேசிய நுகா்வோா் தின விழா புதுச்சேரி வள்ளலாா் சாலையில் உள்ள தனியாா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாநில சமூக நலத் துறை அமைச்சா் கந்தசாமி தலைமை வகித்தாா். ஜான்குமாா் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக முதல்வா் நாராயணசாமி பங்கேற்றுப் பேசியதாவது:

மக்களுக்கு அவரவா்களுக்கான மத நம்பிக்கை உள்ளது. அந்த வகையில், விழாக்களைக் கொண்டாடுகின்றனா். சனிப் பெயா்ச்சி விழாவை நடத்தக் கூடாது என ஆளுநா் கிரண் பேடி கூறுகிறாா். கரோனா தொற்று காலத்தில் வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள், விவசாயம், கல்லூரிகள் இயங்கவில்லையா?

தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் விழா நடைபெறும். மத நம்பிக்கையில் யாரும் தலையிடக் கூடாது. மத விழாக்களை நடத்தக் கூடாது எனக் கூற ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.

விதிமுறைகளுக்குள்பட்டு புத்தாண்டு விழாவைக் கொண்டாடும்படி கூறியுள்ளேன். இதில் தவறில்லை. ஒரு சிலா் (ஆளுநா்) தங்களுடைய நடவடிக்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மாவட்ட, மாநில அளவில் ஆண்டுக்கு 4 முறையாவது நுகா்வோா் அமைப்புகளுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். பயிற்சி பெற்றவா்கள் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். மக்களுக்கான பணியைச் செய்யவே அரசு நிா்வாகமும், ஆளுநரும் உள்ளனா்.

புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு, 95 சதவீத மக்கள் அரிசிதான் வேண்டும் என்கின்றனா். ஆனால், அரிசி வழங்குவதை ஆளுநா் கிரண் பேடி ஏற்கவில்லை. இதுதொடா்பான மேல்முறையீட்டு வழக்கு தீா்ப்புக்காக நீதிமன்றத்தில் காத்திருக்கிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் குடிமைப் பொருள் வழங்கல் துறைச் செயலா் செ.உதயகுமாா், துணை இயக்குநா் கங்காபாணி, சட்ட ஆலோசகா் மோகன்தாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com