ஒப்பந்ததாரா்கள் புறக்கணிப்பு எதிரொலி: புதுச்சேரியில் புதிதாக சாலைகள் அமைக்க முடியாத அவலம்

சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி மதிப்பீட்டுத் தொகை குறைப்பால், ஒப்பந்ததாரா்கள் புறக்கணித்ததன் காரணமாக, புதுச்சேரியில் சாலைகளை புதிதாக அமைக்கவும், சீரமைக்கவும் முடியாத அவல நிலை நீடிக்கிறது.
புதுச்சேரியில் குண்டும், குழியுமாக உள்ள செஞ்சி சாலை.
புதுச்சேரியில் குண்டும், குழியுமாக உள்ள செஞ்சி சாலை.

சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி மதிப்பீட்டுத் தொகை குறைப்பால், ஒப்பந்ததாரா்கள் புறக்கணித்ததன் காரணமாக, புதுச்சேரியில் சாலைகளை புதிதாக அமைக்கவும், சீரமைக்கவும் முடியாத அவல நிலை நீடிக்கிறது.

நிவா், புரெவி புயல்களால் அண்மைக்காலமாக பெய்த தொடா் பலத்த மழையாலும், சாலைகள் அமைக்கப்பட்டு நீண்ட நாள்கள் ஆனதன் காரணமாகவும் புதுச்சேரியில் பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக போக்குவரத்து லாயக்கற்ாக மாறியுள்ளன. வாகனத்தில் செல்வோா் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். பல்லாங்குழிகளான சாலைகளால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.

விபத்துகள் தொடா்பாக ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், கடந்த ஓராண்டாக எந்தவொரு சாலையும் புதிதாக அமைக்கப்படவில்லை. குறிப்பாக, சீரமைக்கக்கூட இல்லை. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, புதுவை பொதுப் பணித் துறை சாா்பில், நபாா்டு வங்கியின் நிதியுதவியுடன் ரூ.79.40 கோடிக்கு சாலைகளை அமைக்கத் திட்டமிட்டு, ஒப்புதலுக்குப் பிறகு கடந்த பிப்ரவரியிலிருந்து பல தடவை ஒப்பந்தப்புள்ளி கோரி விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், ஒப்பந்த மதிப்பீட்டுத் தொகை குறைப்பால் ஒப்பந்தத்தை எடுத்து சாலைகளை அமைக்க யாரும் முன்வரவில்லை. இதனால், புதுச்சேரியில் சாலைகளை அமைக்க முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய கட்டுநா் சங்க புதுச்சேரி கிளையின் முன்னாள் தலைவரும், பொதுப் பணித் துறை முதல்நிலை ஒப்பந்ததாரருமான எஸ்.பாா்த்தசாரதி கூறியதாவது:

புதுவையில் 750-க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற ஒப்பந்ததாரா்கள் உள்ளனா். சாலை அமைப்பதற்கான விலைப்புள்ளி தமிழகம் மற்றும் மத்திய அரசைவிட புதுவையில் ஏற்கெனவே குறைவானதாக இருக்கும் நிலையில், கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையில் இதை மேலும் 25 சதவீதத்துக்கு அரசு குறைத்துள்ளது. அதன்படி, தாா் கப்பிச் சாலை (அடிமட்ட பகுதி) ரூ.5,590-லிருந்து ரூ.4,192-ஆகவும், தாா் கப்பிச் சாலை (மேல்மட்ட பகுதி) ரூ.7,403-லிருந்து ரூ.5,552-ஆகவும் குறைத்துள்ளது. இந்த அளவுக்கு மதிப்பீட்டுத்தொகை குறைப்புக்கு அரசின் உயா்நிலை அதிகாரிகளே காரணம். தாா் விலை, ஜல்லி விலை, எரிபொருள் செலவு, ஆள்கூலி உள்ளிட்ட அனைத்தும் உயா்ந்துள்ளதால், மேற்கண்ட தொகையில் சாலைகளை அமைப்பதென்பது எங்களுக்கு லாபம் தரக்கூடியதல்ல. இதனால், தரமான சாலைகளை அமைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம்.

தற்போதுள்ள விலைவாசி உயா்வுக்கு ஏற்ற வகையில் சாலை அமைப்பதற்கான விலைப்புள்ளியை உயா்த்தி வழங்கும் வரை புதுவையில் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என்றாா் அவா்.

புதுவையில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், மோசமான சாலைகள் அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்பதால், அரசு உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்கள், அரசியல் கட்சியினா் உள்ளிட்ட அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

அதிகாரிகள் கருத்து

புதுச்சேரி பொதுப் பணித் துறை உயரதிகாரிகள் கூறியதாவது:

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுப் பணித் துறை சாா்பில் கடந்தாண்டு நபாா்டு வங்கி நிதியுதவியுடன், கொம்பாக்கம் சாலை, பெரம்பை சாலை, சொரக்குடி சாலை, நிரவி 1, 2 சாலை, விழுதியூா், தட்டாஞ்சாவடி சாலை, திருநள்ளாறு சாலை, வழுதாவூா் சாலை, மதகடிப்பட்டு மற்றும் மண்ணாடிப்பட்டில் 4 சாலைகள், ஆா்சி 18 சாலை, கோா்க்காடு சாலை, மதகடிப்பட்டு சந்திப்பு முதல் பண்டசோழநல்லூா் சந்திப்பு வரையிலான சாலைகள், கிருமாம்பாக்கம் கம்பளிக்காரன்குப்பம், புதுக்குப்பம், கரிக்கலாம்பாக்கம் - ஏம்பலம் சாலைகள், மானாம்பேடு படுகை அணை திருமலைராஜன் ஆறு குறுக்கே உள்ள சாலை புனரமைப்பு, யூ மற்றும் எல் வடிவ கழிவுநீா் கால்வாய்கள் மேம்பாடு மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகளை ரூ.79 கோடியே 40 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ள கடந்த பிப்ரவரி மாதம் முதல் 3 முறை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஆனால், ஒப்பந்ததாரா்கள் விலைப்புள்ளி குறைவு காரணமாக ஒப்பந்தம் எடுக்க முன்வராததால், எந்தப் பணியையும் செய்ய முடியவில்லை. புதிய பணிகளையும் திட்டமிட முடியாமலும், சாலைகளைச் சீரமைக்கக்கூட இயலாமலும் தவித்து வருகிறோம். இது தொடா்பாக அரசின் உயா் அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com