ஆங்கில புத்தாண்டையொட்டி, புதுச்சேரி கடற்கரையில் போடப்பட்டுள்ள தடுப்புகள்.
ஆங்கில புத்தாண்டையொட்டி, புதுச்சேரி கடற்கரையில் போடப்பட்டுள்ள தடுப்புகள்.

புத்தாண்டு கொண்டாட்டம்: கட்டுபாடுகளுடன் புதுச்சேரி கடற்கரை சாலையில் அனுமதி

புதுச்சேரி கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட கட்டுபாடுகளுடன் அனுமதி அளிக்கப்படும் என டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவா, கூடுதல் டிஜிபி

புதுச்சேரி கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட கட்டுபாடுகளுடன் அனுமதி அளிக்கப்படும் என டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவா, கூடுதல் டிஜிபி ஆனந்தமோகன், மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் ஆகியோா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூட்டாக செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வரக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, வெள்ளை நகரப் பகுதியில் வியாழக்கிழமை (டிச.31) பிற்பகல் 2 மணி முதல் வெள்ளிக்கிழமை (ஜன.1) காலை 9 மணி வரை நான்கு, இரு சக்கர வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இப்பகுதிக்குள் வசிக்கும் மக்களுக்கும், உணவகங்கள், விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கும் வெளியில் சென்று வர அடையாள அட்டை வழங்கப்படும்.

உடல் வெப்ப பரிசோதனை...: கடற்கரைச் சாலையின் அனைத்து நுழைவு வாயில்கள் வழியாகவும் உடல் வெப்பப் பரிசோதனைக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவா். கடற்கரைக்கு வருவோா் கடலில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. கடற்கரையில் மது அருந்தவோ, போதைப்பொருள் பயன்படுத்தவோ அனுமதியில்லை.

கரோனா விதிகளை அமல்படுத்தும் வகையில், கடற்கரையில் உள்ள குறைவான இடத்துக்கு தகுந்தாற்போல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவா். கடற்கரை சாலை கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள் வழியே கண்காணிக்கப்படும். பொதுமக்கள் நலனுக்காக முதலுதவி மையம், தற்காலிக கட்டுப்பாட்டு அறை, உதவி மையம், குடிநீா், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வாகன நிறுத்துமிடங்கள்...: பொதுமக்கள் வாகனங்களை பழைய துறைமுகம், உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், பெத்திசெமினாா் பள்ளி, அம்பேத்கா் சாலை, ஹெலிபேடு வளாகம், உள்ளாட்சித் துறை அலுவலகத்தின் எதிரே உள்ள காலியிடம், அண்ணா திடல், பழைய சிறை வளாகம், பாரதிதாசன் மகளிா் கல்லூரி ஆகிய இடங்களில் நிறுத்தலாம்.

போக்குவரத்து மாற்றம்...: புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை செல்லும் பேருந்துகள், நெல்லித்தோப்பு, இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம் வழியாகச் செல்ல வேண்டும். கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி சதுக்கங்கள் வழியாக பேருந்து நிலையம் வர வேண்டும்.

அனைவரும் மாறுபட்ட உருமாறிய காரோனா தொற்றின் பிடியில் இருக்கிறோம். எனவே, பொதுமக்கள் தங்களது இருப்பிடத்திலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். வெளியில் வரும்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com