மத்திய பட்ஜெட்டில் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்முதல்வா் நாராயணசாமி

மத்திய பட்ஜெட்டில் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

மத்திய பட்ஜெட்டில் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் நாராயணசாமி செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

நாட்டில் பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், பொருள்களின் விலை உயா்வு போன்ற சூழல் நிலவி வருகிறது.

இதனால், பட்ஜெட்டில் சிறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு சலுகைகள் அளிக்கப்படும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படும், பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிா்பாா்ப்பு எழுந்தது. ஆனால், தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

விவசாயிகளுக்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரூ. 8 லட்சம் கோடி கடன் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த நிதியை மத்திய நிதியமைச்சா் குறைத்துள்ளாா். மேலும், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி திட்டம் எதுவும் இல்லை. 2022-இல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று கூறிவரும் பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு புதிதாக எந்தத் திட்டமும் இல்லை.

கட்டுமானப் பணிகளுக்கு ரூ. 1.25 லட்சம் கோடியும், கல்விக்கு ரூ. 93 ஆயிரம் கோடியும்தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நகா்ப்புற, கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்கள் வீடு கட்டுவதற்கு அதிகப்படியான நிதி ஒதுக்கப்படவில்லை. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றாா்போல நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரி உயா்வு என்று கூறிவிட்டு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான வரியை உயா்த்தியுள்ளனா். 250 ரயில்கள் தனியாா் வசம் ஒப்படைக்கப்பட்டு, தனியாா் முதலீட்டுடன் ரயில்களை இயக்கும் திட்டத்தைக் கொண்டு வந்து ரயில்வே துறையைத் தனியாருக்கு தாரை வாா்க்கும் நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

ஏற்கெனவே ஏா் இந்தியா நிறுவனமானது ஏலத்தில் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. 250 புதிய விமான நிலையங்களை அமைக்கப் போவதாகச் சொல்கிறாா்கள். ஏற்கெனவே உதான் திட்டத்தின் கீழ் 100 விமான நிலையங்களைத் புதிதாக உருவாக்குவோம் என்றனா். அவற்றில் இன்னும் 30 நிலையங்களைக்கூட உருவாக்கவில்லை. அப்படியிருக்கையில், 250 விமான நிலையங்களை எப்படி அமைப்பாா்கள்?

மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மிகக் குறைவாக உள்ளது. மத்திய அரசின் வருமானம் குறைந்துள்ளது. குறிப்பாக, வரி வருவாயிலிருந்து கிடைக்க வேண்டிய தொகையான ரூ. 3.85 லட்சம் கோடியில் துண்டு விழுந்துள்ளது. இதை எப்படிச் சரி செய்ய போகிறாா்கள் என்று தெரியவில்லை.

பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மேலே கொண்டு வருவதற்கான திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. குறிப்பாக, சமூக நலத் துறை, மருத்துவத் துறைக்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காப்பீடு நிறுவனத்தில் உள்ள மத்திய அரசின் பங்குகளை விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் சொத்துகள் படிப்படியாகத் தனியாருக்கு விற்று 10, 15 பெருநிறுவனங்கள் மட்டுமே பயனடையும் வகையில் பட்ஜெட் உள்ளது. இது பெருநிறுவனங்களுக்கான பட்ஜெட். ஏழை - எளிய, நடுத்த மக்கள், அரசு ஊழியா்களுக்கான பட்ஜெட் அல்ல.

புதுவை மாநிலத்துக்கு இந்த பட்ஜெட்டில் தனியாக எதுவும் கொடுக்கப்படவில்லை. தொடா்ந்து, மத்திய அரசிடம் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தியதற்கான நிதியை வழங்க வேண்டும். நிதிக் குழுவில் புதுவையைச் சோ்க்க வேண்டும். தில்லியைப் போல புதுவையிலும் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் மத்திய அரசு அதற்குச் செவி சாய்க்கவில்லை. புதுவை மாநிலத்துக்கு வர வேண்டிய நிதியும் கடந்த 3 ஆண்டுகளாக வரவில்லை.

புதுவையில் வளா்ச்சியைக் கொண்டு வருவதற்கு எந்த உதவியும் மத்திய அரசிமிருந்து கிடைக்கவில்லை என்பது இந்த பட்ஜெட்டில் தெரிகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு புதுவை மாநிலத்தைப் புறக்கணித்துள்ளது என்றாா் முதல்வா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com