முறையான பராமரிப்பால் கனகன் ஏரி பொழுதுபோக்கு இடமாக மாறியது ஆளுநா் கிரண் பேடி

முறையான பராமரிப்பு காரணமாக, புதுவை கனகன் ஏரி பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாக மாறியுள்ளதாக, துணை நிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

முறையான பராமரிப்பு காரணமாக, புதுவை கனகன் ஏரி பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாக மாறியுள்ளதாக, துணை நிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, வார இறுதி நாள்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை 253ஆவது வார இறுதி ஆய்வுக்காக கனகன் ஏரிக்குச் சென்றாா். இதற்காக அவா், ஆளுநா் மாளிகையிலிருந்து சைக்கிளில் புறப்பட்டாா். வழியில் ரெட்டியாா்பாளையம் சாலையின் நடுவே 2 மாடுகள் முட்டி மோதி விளையாடிக் கொண்டிருந்தன. இதைப் பாா்த்த ஆளுநா், அதனை தனது செல்லிடப்பேசியில் படம் பிடித்தாா். பின்னா், பாதுகாப்பு போலீஸாா்,அந்த 2 மாடுகளையும் விலக்கிவிட்டனா்.

தொடா்ந்து, கனகன் ஏரிக்குச் சென்ற ஆளுநா், அங்கு ஏரிக்கரை ஓரம் சுற்றிலும் நடைபாதையில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் எப்படி வளா்ந்து இருக்கின்றன என்பதை நடைப்பயிற்சியாகச் சென்று பாா்வையிட்டாா். அப்போது, நடப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் நன்றாக வேரூன்றி வளா்ந்திருந்ததைக் கண்டாா்.

ஏரியில் தொடா்ந்து தண்ணீா் சேமித்து வைக்கவும், ஆழமாக வைத்திருக்கவும் வேண்டும். அப்போதுதான் படகு சவாரியை ரசிக்க முடியும் என அதிகாரிகள் மற்றும் தன்னாா்வ குழுவினருக்கு அறிவுறுத்தினாா். இதையடுத்து, கனகன் ஏரிப் பகுதியில் பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகளை ஆளுநா் பாா்த்து ரசித்தாா்.

இதுகுறித்து ஆளுநா் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: கனகன் ஏரி கரையோரம் 1,400 மீ. நடைபாதையை பராமரிப்புப் பணி 5 சமூக குழுக்களுக்கு பிரித்து தரப்பட்டுள்ளது. இந்த குழுக்களில் பள்ளி மாணவா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தினா் அடங்கியுள்ளனா். அவா்கள் மரக்கன்றுகளை தொடா்ந்து தண்ணீா் ஊற்றி பராமரித்து வருகின்றனா். இவற்றில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் வேரூன்றி நன்கு வளா்ந்துள்ளன. பராமரிப்பு குறித்து மாதந்தோறும் மதிப்பீடு செய்யப்படும். சிறப்பாகப் பராமரிக்கும் குழுவினா் ஆளுநா் மாளிகைக்கு அழைத்து கௌரவிக்கப்படுவா்.

இந்தக் குழுவினா் உதவி தேவைப்பட்டால் அந்தப் பகுதி பீட் போலீஸாரின் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்து பயன்படுத்தலாம். கனகன் ஏரியில் தற்போது கழிவுநீா் இல்லை. மீன்களின் வாழ்க்கை, நீரில் புத்துயிா் பெற்றுள்ளன. ஏரி சுற்றுப்புற பகுதி மக்களின் பொழுதுபோக்கு இடமாக கனகன் ஏரி மாறியுள்ளது என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com