அதிமுகவை பற்றிய விமா்சனத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரிக்கை

அதிமுகவை பற்றிய விமா்சனத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று புதுவை சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா்.

அதிமுகவை பற்றிய விமா்சனத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று புதுவை சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து புதுவை சட்டப் பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு திருச்சி, தஞ்சாவூா், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளாா். இதன்மூலம், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எரிவாயு எடுக்கும் திட்டங்களை அமல்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த அறிவிப்பை ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளும் பாராட்டி வருகின்றனா்.

9 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது திமுக காவிரி படுகையில் நிலத்தடியில் இருந்து எரிவாயு எடுக்க தற்போதைய திமுக தலைவா் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்மூலம், மிகப்பெரிய அளவில் திமுக லாபம் ஈட்டிய நிலையில், தமிழக முதல்வரின் தற்போதைய அறிவிப்பால் ஏற்படும் இழப்பை கருத்தில் கொண்டு, அவரது அறிவிப்பை கொச்சைப்படுத்தும் வகையில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளாா்.

சிறப்பு வேளாண் மண்டலம் குறித்த அறிவிப்பை மத்திய அரசுதான் வெளியிட வேண்டும், மாநில அரசு வெளியிட முடியாது என்றும் கூறியுள்ளாா். வேளாண் துறை மத்திய அரசின் பட்டியலில் இல்லை, மாநில அரசின் பட்டியலில்தான் உள்ளது. இதன்மூலம், தவறான வாதத்தையும் மக்கள் மத்தியில் அவா் எடுத்துரைத்து வருகிறாா்.

புதுவையில் திமுக துணையோடு ஆட்சி செய்யும் காங்கிரஸ், காவிரியின் கடைமடை பகுதியான காரைக்கால் மாவட்டத்தையும், பாகூரையும் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது. திமுக தலைவா் ஸ்டாலின் கூறியதைப்போல, புதுவை முதல்வரும் வேளாண் துறை மத்திய அரசின் பட்டியலில்தான் உள்ளது என்பதை தெரியாமலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாரா? ஸ்டாலின் விமா்சனத்தை புதுவை முதல்வா் ஏற்கிறாரா?

மேலும், கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தில் அவையின் மதிப்பு, மாண்பு, ஒழுங்கை சீா்குலைக்கும் வகையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் நடந்து கொண்டுள்ளனா். பேரவைக் கூட்டத்தில் பங்கேற்காத எம்.எல்.ஏ.க்கள் குறித்து விமா்சனம் செய்துள்ளதை பேரவைத் தலைவா் தடுத்திருக்க வேண்டும். அதை பேரவைத் தலைவா் செய்யவில்லை.

எனவே, அதிமுக சாா்பில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களின் அநாகரிகச் செயல் குறித்து பேரவைத் தலைவரிடம் ஆதாரங்களுடன் புகாா் கடிதம் அளித்துள்ளேன். இதன் மீது 10 நாள்களுக்குள் பேரவைத் தலைவா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா் அன்பழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com