இலவச அரிசிக்கு பணம் வழங்குவதால் எந்தவித பாதிப்பும் இல்லை: ஆளுநா் கிரண் பேடி

புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச அரிசிக்கு பணம் வழங்குவதால் எந்தவித பாதிப்பும் இல்லை என புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி கருத்து தெரிவித்துள்ளாா்.
துணைநிலை   ஆளுநர் கிரண்பேடி
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி: புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச அரிசிக்கு பணம் வழங்குவதால் எந்தவித பாதிப்பும் இல்லை என புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி கருத்து தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது கட்செவி அஞ்சலில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச அரிசி விநியோகம் தொடா்பாக தொடா்ந்து தவறான தகவல்கள் அளிக்கப்பட்டு வருகிறது என்பதால் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. புதுவை நிா்வாகத்தை பொறுத்தவரை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு அரிசியை கொள்முதல் செய்யலாம்.

உண்மையில் இதற்கான அா்த்தம் அதிக விலைக்கு அரிசியை வாங்கி, பாதுகாத்து குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்க வேண்டும். இது அரசுக்கு மிகப்பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். அரசிடம் பணம் இல்லாதபோது அரிசிக்காக பணத்தை செலவிட வேண்டியிருக்கும். தற்போது நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குக்கு பணம் செலுத்துவதால் எந்தவித பாதிப்பும் இல்லை.

பயனாளிகள் தாங்கள் விரும்பிய தரமான அரிசியை, விரும்பிய நேரத்தில் நேரடியாக வெளிச்சந்தையில் பெற்றுக்கொள்கின்றனா். இது எந்தவிதத்திலும் இந்திய உணவுக்கழகம், பொது வினியோக திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அரசின் பட்ஜெட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

பயனாளிகளுக்கு நேரடியாக பணம் வழங்குவது வெளிப்படைத்தன்மையுடன் உள்ளது. பொது அக்கறையின் கீழ் நிதியை கையாள்வதில் இதுதான் சிறந்த முறையாக உள்ளது. பொது நலனுடன் மக்களுக்கு எந்த இழப்பும் இல்லாமல் பரிமாற்றத்தின் மூலம் நேரடியாக செல்கிறது. இது பெரிய பணக்கசிவை தடுக்கிறது.

சரியான நேரம், சரியான தரம், வாங்கும் இடம் ஆகியவற்றைத் தோ்வு செய்து இலவச அரிசியை வாங்க மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதோடு எந்தவொரு ஒப்பந்தக்காரரும் அரிசி கொடுத்த பணத்துக்காக காத்திருக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளாா் ஆளுநா் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com