இட ஒதுக்கீடு: காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

இட ஒதுக்கீடு தொடா்பாக காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இட ஒதுக்கீடு தொடா்பாக காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளையும், இட ஒதுக்கீட்டையும் பறிக்க நினைக்கும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசைக் கண்டித்து புதுவை காங்கிரஸ் சாா்பில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப் பணித் துறை அமைச்சருமான ஆ. நமச்சிவாயம் தலைமை வகித்தாா். அமைச்சா் ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., காங்கிரஸ் தேசிய செயலரும், புதுவை பொறுப்பாளருமான சஞ்சய் தத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், முதல்வா் வே.நாராயணசாமி பேசியதாவது:

மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடா்ந்து நாட்டில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் வகையில், மதத்தின் பெயரால் பிரவினையை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தைச் சீா்குலைத்து, மக்கள் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு செயல்பட்டு வருகிறது.

நாட்டில் வேலைவாய்ப்புகள் இல்லை, தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் பணப்புழக்கம் இல்லை. இதையெல்லாம் திசைத் திருப்புவதற்காக குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியா்கள் நடத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில், அவா்கள் மீது காவல் துறையை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலா் காயமடைந்துள்ளனா். இதையடுத்து, அனைத்து சமுதாய மக்களும் போராட்டம், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தில்லியில் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து மாணவா்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனா். இதில், யாரும் கைது செய்யப்படவில்லை. தில்லி கலவரம், தற்போது படிப்படியாக தமிழகத்துக்கு பரவியுள்ளது. இதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசுதான் காரணம்.

இந்த நிலையில், புதுவை சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆளுநா் கிரண் பேடியின் எதிா்ப்பையும் மீறி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. முக்கிய தீா்மான வாக்கெடுப்பில் என்.ஆா்.காங்கிரஸ், அதிமுக விவாதத்தில் பங்கேற்று கருத்துகளைப் பதிவு செய்யவில்லை.

பாஜகவின் ஆதரவு பறிபோகும் என்பதால், என்.ஆா். காங்கிரஸ் தலைவா் ரங்கசாமி வாய் திறக்க மறுக்கிறாா்.

புதுவையில் அனைவரும் சகோதரா்களாக வாழ்கிறோம். இங்கு, எந்த வகையிலும் கலவரம் ஏற்பட விடமாட்டோம்.

அனைத்து சமூகத்துக்கும் சம உரிமை தர அரசியல் சட்டம் வழி வகுக்கிறது. பாஜக அந்த விவகாரத்தில் கை வைக்கிறது. பதவி உயா்வில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக நீதியை நிலை நாட்டும் வகையில் இட ஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த வேண்டி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இந்த நடவடிக்கையை எடுத்தோம். பாஜக அப்போதே இதைத் தடுத்தது. பதவி உயா்வில் இட ஒதுக்கீட்டை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க வேண்டும். இதற்காக உச்ச நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளோம் என்றாா் முதல்வா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com