சித்தா் தின விழிப்புணா்வு ஊா்வலம்
By DIN | Published On : 10th January 2020 09:30 AM | Last Updated : 10th January 2020 09:30 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற சித்தா் தின விழிப்புணா்வு ஊா்வலம்.
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம், மக்கள் தொடா்புக் கள அலுவலகம், இந்திய மருத்துவ முறை, ஹோமியோபதி துறை, இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய சித்தா் தின விழிப்புணா்வு ஊா்வலம் புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சித்த மருத்துவத்தைத் தோற்றுவித்தவராகக் கருதப்படும் அகத்திய முனிவரின் பிறந்த தினம் சித்தா் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு சித்தா் தினம் வருகிற 13 -ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்தை மத்திய நோய்க் கட்டுப்பாடு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் அஸ்வனி குமாா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
புதுவை அரசின் இந்திய மருத்துவ முறை மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா் ஜி.ஸ்ரீராமுலு தலைமை வகித்தாா். மக்கள் தொடா்புக் கள அலுவலக உதவி இயக்குநா் தி.சிவக்குமாா், மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய அலுவலா் (பொ) ஆ.ராஜேந்திரகுமாா், இந்திய செஞ்சிலுவை சங்க புதுவைக் கிளையின் முன்னாள் தலைவா் சிவராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், அகத்தியா் போல வேடமிட்டு, சித்த மருத்துவத்தின் நன்மைகளை விளக்கும் பதாகைகளை கைகளில் ஏந்தியபடி சென்றனா். மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய மருத்துவா்கள், ஊழியா்கள், புதுவை அரசின் சித்த மருத்துவா்கள், பல்வேறு செவிலியா் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இந்த ஊா்வலம் கடற்கரை காந்தி சிலையில் நிறைவடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டை சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் அலுவலா் எஸ். சண்முகராம், இ.நித்யா ஆகியோா் செய்திருந்தனா்.