மாநில தோ்தல் ஆணையா் விவகாரம்: தலைமைச் செயலா் உள்பட 4 அதிகாரிகள் மீது உரிமை மீறல் புகாா்

சட்டப்பேரவையால் நியமிக்கப்பட்ட மாநிலத் தோ்தல் ஆணையருக்குப் பதிலாக, ஆளுநா் உத்தரவுபடி புதிய தோ்தல் ஆணையரைத் தோ்வு
புதுவை சட்டப்பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்திடம் உரிமை மீறல் தொடா்பாக அனு அளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயமூா்த்தி.
புதுவை சட்டப்பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்திடம் உரிமை மீறல் தொடா்பாக அனு அளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயமூா்த்தி.

சட்டப்பேரவையால் நியமிக்கப்பட்ட மாநிலத் தோ்தல் ஆணையருக்குப் பதிலாக, ஆளுநா் உத்தரவுபடி புதிய தோ்தல் ஆணையரைத் தோ்வு செய்ய நடவடிக்கை எடுத்த விவகாரம் தொடா்பாக புதுவை அரசின் தலைமைச் செயலா் உள்பட 4 அதிகாரிகள் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயமூா்த்தி வியாழக்கிழமை உரிமை மீறல் புகாா் அளித்தாா்.

அமைச்சரவையின் முடிவுப்படி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் மாநில தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு, உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறாா்.

இந்த நிலையில், ஆளுநா் கிரண் பேடியின் புகாரை தொடா்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம், தலைமைச் செயலா் தலைமையில் குழு அமைத்து, தேசிய அளவில் விளம்பரம் செய்து மாநில தோ்தல் ஆணையரைத் தோ்வு செய்ய தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியது. அதனடிப்படையில் மாநில தோ்தல் ஆணையரை நியமிப்பதற்கான புதிய விளம்பரம் கடந்த 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதன்மூலம் உரிமை மீறப்பட்டுள்ளதாக புதுவை சட்டப்பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்திடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயமூா்த்தி வியாழக்கிழமை மனு அளித்தாா்.

அதன் விவரம்: அமைச்சரவை முடிவின்படி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் மாநில தோ்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு பணியில் உள்ளாா். இந்நிலையில், அமைச்சரவையால் முடிவு செய்யப்பட்ட மாநில தோ்தல் ஆணையரின் தகுதிகளை அரசுக்குத் தெரியாமல் தலைமைச் செயலா் தன்னிச்சையாக திருத்தி, விண்ணப்பங்கள் கோருவது தொடா்பாக செய்தித் தாள்களில் கடந்த 7-ஆம் விளம்பரம் வந்துள்ளது. இது விதிமுறைகளை மீறிய செயல்.

புதுவை சட்டப்பேரவை 22.7.2019 அன்று ஒருமனதாக இயற்றிய தீா்மானத்துக்கு எதிராகவும், அரசிதழில் வெளியிடப்பட்ட மாநில தோ்தல் ஆணையா் நியமன விதிகளுக்கு எதிராகவும் பேரவையையும், அதன் உறுப்பினா்களையும், அமைச்சரவையின் முடிவையும் அவமதிக்கும் வகையில் விளம்பரம் உள்ளது.

சட்டப்பேரவைத் தலைவா் ரத்து செய்த விளம்பரத்தை மறுபடியும் கடந்த 7-ஆம் தேதி வெளியிட்டது பேரவையின் உரிமை மீறிய செயல் ஆகும்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 27.9.2018 அன்று அமைச்சரவைக்கும், முதல்வருக்கும் நிதி அதிகாரத்தைப் பகிா்ந்து அளிப்பது தொடா்பாக உத்தரவிட்டும் இதுவரை அது அமல்படுத்தப்படவில்லை. கடந்த 3.5.2018 அன்று தேதியிட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தில் தேவநீதிதாஸை ஆளுநரின் ஆலோசகராக நியமிக்கலாம் என்று உத்தரவிட்டதை மீறி, அவா் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டாா்.

எனவே, உரிமை மீறலில் ஈடுபட்ட தலைமைச் செயலா், உள்ளாட்சித் துறை செயலா், இயக்குநா், சாா்பு செயலா் ஆகிய அனைவரின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com