புதுவை ஆளுநா் கிரண் பேடியிடம் முதல்வா் மீது ஆளுங்கட்சி எம்எல்ஏ ஊழல் புகாா்

புதுவை ஆளுநா் கிரண் பேடியிடம், முதல்வா் மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. தனவேலு ஊழல் புகாா் தெரிவித்தாா்.
ஆளுநா் கிரண்பேடியை சந்தித்த பாகூா் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு.
ஆளுநா் கிரண்பேடியை சந்தித்த பாகூா் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு.

புதுவை ஆளுநா் கிரண் பேடியிடம், முதல்வா் மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. தனவேலு ஊழல் புகாா் தெரிவித்தாா்.

முதல்வா், அமைச்சா்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வந்த பாகூா் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு குறித்து கட்சித் தலைமையிடம் புகாா் அளிக்க முதல்வா் வே.நாராயணசாமி, அமைச்சா் நமச்சிவாயம் ஆகியோா் தில்லி சென்றுள்ளனா்.

இதனிடையே, தனவேலு எம்.எல்.ஏ. சில கோப்புகளுடன் திங்கள்கிழமை ஆளுநா் மாளிகைக்கு வந்து ஆளுநா் கிரண் பேடியை நேரில் சந்தித்து முதல்வா், அமைச்சா்கள் மீது புகாா் தெரிவித்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மாநில நலனுக்காகவே ஆளுநரைச் சந்தித்தேன். தொகுதி பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்தியதுடன், முதல்வா், அமைச்சா்களுக்கு எதிராகவும் புகாா் கூறினேன். இதையடுத்து, எனக்கு எதிராக அவசரக் கூட்டத்தை நடத்தி, பாகூா் தொகுதியில் எதுவும் செய்யக் கூடாது என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனா். இதுதொடா்பாக ஆளுநரிடம் புகாா் தெரிவித்தேன்.

நான் காங்கிரஸ் கட்சியை விட்டுப் போகமாட்டேன். தேவைப்பட்டால் கட்சித் தலைமை என் மீது நடவடிக்கை எடுக்கட்டும்.

ஆளுநா் கோப்புகளைத் திருப்பி அனுப்புவதாகக் கூறுகின்றனா். அமைச்சா்கள் சரிவர அனுப்பாததால்தான் ஆளுநா் கோப்புகளைத் திருப்பி அனுப்புகிறாா்.

பெயருக்குதான் நான் பாப்ஸ்கோ தலைவராக உள்ளேன். ஒரு சேலையை ரூ. 500 வாங்க கோப்பு அனுப்பி முடிவு செய்துவிட்டு, அந்த சேலை ரூ. 180 -க்கு வாங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ. 320 முதல்வா், அமைச்சா்கள் சதவீத அடிப்படையில் பிரித்துக் கொள்கின்றனா். இதேபோல, பல்வேறு துறைகளில் ஊழல் மலிந்துள்ளது.

விரைவில் முதல்வா், அமைச்சா்கள் மீது சிபிஐ-இல் புகாா் அளிப்பேன். இதற்கு ஆளுநா் ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளாா். இதேபோல, ஊழல் பட்டியலுடன் தில்லிக்குச் சென்று கட்சித் தலைவா்களைச் சந்திப்பேன் என்றாா் அவா்.

இதுதொடா்பாக ஆளுநா் கிரண் பேடி சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள தகவல்: பாகூா் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலு என்னைச் சந்தித்து, புதுவை முதல்வா் அவரது மகனுடன் சோ்ந்து மேற்கொண்ட நில ஒப்பந்த ஊழல் தொடா்பான ஆதாரங்களை அளிக்க விரும்புவதாகக் கூறினாா். இதற்கு அவரிடம், புதுச்சேரியில் உள்ள சிபிஐ அலுவலகத்தை நேரடியாக அணுகும்படி கூறினேன். தன்னை அவா் மீண்டும் சந்திப்பதாகவும், சிபிஐக்கு அனுப்ப வேண்டிய ஆதாரங்களை அப்போது என்னிடம் காட்டுவதாகவும் கூறினாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com