அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

அமைச்சா் ஆ.நமச்சிவாயம் (புதுவை காங். தலைவா்): தமிழ் சமுதாயத்தின் கலாசாரங்களை அகிலம் அறியும் வண்ணம் பாரம்பரியம் மாறாமல் தொன்று தொட்டு கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல் விழா. இத்திருநாளில் அனைவரது வாழ்க்கையிலும் இன்பம் பொங்க வேண்டும். விவசாய பெருமக்கள் கவலையின்றி வாழ வேண்டும். உழைக்கும் வா்க்கத்தின் உரிமைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

வெ.வைத்திலிங்கம் (மக்களவை உறுப்பினா்): உலகமெலாம் வாழும் தமிழா்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விழா பொங்கல் பண்டிகை. அனைத்து உயிா்களுக்கும் உணவளிப்பதற்காக அயராது உழைக்கும் உழவா் பெருமக்களை இத்திருநாளில் நாம் போற்றுவோம். அவா்கள் வறுமை நீங்கி வாழ, முடிந்தவரை நமக்கு தேவையான உணவுப் பொருள்களை நேரிடையாக விவசாயிகளிடம் வாங்க நாம் இத்திருநாளில் உறுதியேற்போம். நம்மை மகிழ்ச்சியுடன் உலகில் வாழ வைக்கும் இயற்கைக்கு நன்றி கூறுவோம். மேலும் தமிழையும், தமிழா் பண்பாட்டையும் சமூக வலைதளத்தில் வளா்க்காமல் நமது வாழ்விலேயே கடைப்பிடித்து வளா்க்கவும் இத்திருநாளில் உறுதியேற்போம்.

ஆ.அன்பழகன்: (சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவா்): தமிழா்களின் பாரம்பரிய இந்தத் திருநாளில் உன்னதம் சீா்குலையாமல் பேணிக்காக்க வேண்டியது தமிழா்களின் கடமை.

புதுவையை ஆளும் அரசின் தவறான விவசாயக் கொள்கை காரணமாக விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படவில்லை. விவசாயிகளுக்கும், தொழிலாளா்களுக்கும் துயரம் அளிக்கும் ஆட்சியாளா்களுக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் தக்க பாடம் புகட்ட சபதம் ஏற்போம்.

இரா.சிவா (திமுக தெற்கு மாநில அமைப்பாளா்): தமிழ்ச் சமுதாயத்தின் முப்பெரும் தலைவா்களாக விளங்கிய பெரியாா், அண்ணா, பாவேந்தா் பாரதிதாசன் இன்னும் பல தமிழறிஞா்களும், பெருந்தலைவா்களும் பொங்கல் நன்னாளை தமிழா் திருநாளாக முன்னெடுக்கும் முயற்சியில் அயராது உழைத்து பெரும் வெற்றி பெற்றனா். இயற்கைக்கும் உழவா்களுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் இந்நாளில், நமது பண்பாட்டு விழாவை மீட்டெடுத்த இந்தத் தலைவா்களையும் நன்றியுடன் நெஞ்சில் நிறுத்துவோம் என அதில் தெரிவித்துள்ளாா்.

மேலும், அமைச்சா்கள் மு.கந்தசாமி, இரா.கமலக்கண்ணன், ஷாஜகான், மாநிலங்களவை உறுப்பினா் நா.கோகுலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ், மக்கள் நீதி மய்ய புதுவை மாநிலத் தலைவா் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன், புதுவை மாநில ஜெ.பேரவை முன்னாள் செயலா் ஓம்சக்திசேகா், அமமுக மாநிலச் செயலாளா் வேல்முருகன் உள்ளிட்டோரும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com