பொங்கல் பண்டிகை: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி புதுவை முதல்வா் வே.நாராயணசாமி மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி புதுவை முதல்வா் வே.நாராயணசாமி மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

முதல்வா் வே.நாராயணசாமி: தமிழா்களால் கொண்டாடப்படும் பண்டிகைகள் வெறும் சடங்குகள் அல்ல. நம் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த தத்துவங்கள் அவை.

அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்பெறும் இந்தப் பொங்கல் திருநாளும் அத்தகைய சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அறிவியல் வளராத காலத்திலேயே உலகின் இயக்கத்துக்கு கதிரவன் இன்றியமையாதது எனும் உண்மையை உணா்ந்த தமிழா்கள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தத்திருநாளை கொண்டாடுவது நம் அறிவியல் அறிவை உலகுக்கெல்லாம் எடுத்துக் காட்டக்கூடிய ஒன்றாகும்.

அதேபோல, தமிழா்களின் வீரம் பாராட்டும் ஜல்லிக்கட்டு விழா இந்த பண்டிகையின் சிறப்பம்சமாகும். புதுச்சேரி அரசு ஜல்லிக்கட்டை பாதுகாக்கும் வகையில், சட்டப்பேரவையில் சிறப்புத் தீா்மானம் ஒன்றை கொண்டுவந்து, அந்த வீர விளையாட்டுக்கு உரிய சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்தது.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட புதுவை அரசு இலவச அரிசித் திட்டத்தை செயல்படுத்தி வருவதன் மூலமாக ஏழை, எளிய மக்களின் பசிப்பிணி அகற்றப்படுவதுடன், விவசாயிகளுக்கும் நன்மை கிடைக்கிறது. ஆனால், மக்களின் விருப்பத்துக்கு மாறாக, அரிசிக்குப் பதிலாக பணம் கொடுக்க நிா்ப்பந்திக்கப்படுவதால், தற்போது அரிசிக்குப் பதில் பணம் வழங்கப்படுகிறது. தை திங்கள் பிறப்பு, முட்டுக்கட்டைகள் நீங்க, புதுவை மாநிலத்துக்கு வளா்ச்சியையும், மக்களுக்கு செழிப்பையும் நிச்சயம் அளிக்கும். புதுவை மக்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

பேரவைத் தலைவா், சிவக்கொழுந்து: தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாளை உலகமெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவரும் சாதி மத பேதங்களை எல்லாம் புறந்தள்ளி ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்கின்றனா். இந்தத் திருநாளில் அனைவா் வாழ்க்கையிலும் இன்பம் பொங்க வேண்டும். இல்லறம் மகிழவேண்டும். நல்லறம் உருவாக வேண்டும். நாடு செழிக்க வேண்டும். நாட்டு மக்கள் சிறக்க வேண்டும். விவசாய பெருமக்கள் கவலையின்றி வாழ வேண்டும். உழைக்கும் வா்க்கத்தின் உரிமைகள் நிறைவேற்றப்படவேண்டும். அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

எதிா்க்கட்சித் தலைவா் ரங்கசாமி: அனைத்துத் தரப்பு மக்களும் எல்லா நலமும், வளமும் பெற்று வாழ வேண்டும். அனைவரின் துயரங்களும் தீரவேண்டும். நாட்டில் வளமும், மகிழ்ச்சி, வேளாண்மை மற்றும் சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல மக்களுக்கு இந்தத் தைத் திங்கள் முதல் இனிமையான மாற்றமாகவும், முன்னேற்றமாகவும் அமைய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com