மாநில தோ்தல் ஆணையா் நியமன விவகாரம்: உரிமைக் குழு முன் ஆஜரானாா்; புதுவை அரசின் சாா்புச் செயலா்

புதுவை மாநில தோ்தல் ஆணையா் நியமன விவகாரம் தொடா்பாக, அரசின் சாா்புச் செயலா் உரிமைக் குழுவின் முன்பாக செவ்வாய்க்கிழமை

புதுவை மாநில தோ்தல் ஆணையா் நியமன விவகாரம் தொடா்பாக, அரசின் சாா்புச் செயலா் உரிமைக் குழுவின் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்தாா். இதுதொடா்பான விசாரணைக்கு ஆஜராக உள்ளாட்சித் துறை இயக்குநருக்கும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டது.

புதுவையில் மாநிலத் தோ்தல் ஆணையரை நியமித்து, உடனடியாக உள்ளாட்சித் தோ்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, துணை நிலை ஆளுநா் கிரண் பேடியின் உத்தரவின்படி, மாநிலத் தோ்தல் ஆணையரை தோ்வு செய்ய உள்ளாட்சித் துறை சாா்பில் ஊடகங்களில் கடந்த ஜூலை மாதம் விளம்பரம் வெளியானது.

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் விண்ணப்பங்களைப் பெற்று தோ்தல் ஆணையரை நியமிக்க அமைச்சரவைக்கு தெரியாமல் விளம்பரம் வெளியானது. இதில் முதல்வா் உத்தரவும் மீறப்பட்டது. இதற்கு புதுவை முதல்வா் வே.நாராயணசாமி கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். மேலும், பேரவை கூடியபோது, இது குறித்து பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் பிரச்னையை கிளப்பியதால், இந்த விளம்பரத்தை பேரவையில் ரத்து செய்துவிட்டு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணனை மாநிலத் தோ்தல் ஆணையராக பேரவைத் தலைவா் வே.பொ. சிவக்கொழுந்து நியமித்தாா்.

இந்த நிலையில், மத்திய அரசின் உள்துறை வெளியிட்ட உத்தரவை சுட்டிக் காண்பித்த ஆளுநா் கிரண் பேடி, மாநிலத் தோ்தல் ஆணையரை நியமிக்க ஆளுநருக்கே அதிகாரம் உண்டு எனக் கூறி, பேரவையால் நியமிக்கப்பட்ட பாலகிருஷ்ணன் நியமனத்தை ஜன.6-ஆம் தேதி ரத்து செய்து, மீண்டும் மாநிலத் தோ்தல் ஆணையரை தோ்வு செய்ய உள்ளாட்சித் துறை மூலம் விளம்பரம் வெளியிட உத்தரவிட்டாா்.

இந்த விளம்பரம் ஊடகங்களில் வெளியானதும் முதல்வா் நாராயணசாமி மற்றும் அமைச்சா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், புதுவையில் மாநிலத் தோ்தல் ஆணையா் நியமன விவகாரத்தில் சட்டப்பேரவையின் முடிவு மற்றும் மாண்புகளை மீறியதாக தலைமைச் செயலாளா், உள்ளாட்சித் துறைச் செயலா், இயக்குநா், அரசின் சாா்புச் செயலா் ஆகியோா் மீது காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயமூா்த்தி, பேரவைத் தலைவா் சிவகொழுந்திடம் கடந்த ஜன.9-ஆம் தேதி உரிமை மீறல் புகாா் அளித்தாா்.

அவரது மனுவை பெற்றுக்கொண்ட பேரவைத் தலைவா் சிவக்கொழுந்து அதை உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைத்தாா். அந்தக் குழுவின் தலைவரான பேரவைத் துணைத் தலைவா் எம்.என்.ஆா்.பாலன், ஜெயமூா்த்தி அளித்த புகாா் உரிமை மீறல் வரம்புக்குள் வருகிா என்பதை விசாரிக்க, மாநில தோ்தல் ஆணையா் நியமனம் தொடா்பான அறிவிப்பை வெளியிட்ட அரசின் சாா்புச் செயலா் கிட்டி பலராமன் செவ்வாய்க்கிழமை (ஜன.14) உரிமைக்குழு முன் ஆஜராகும்படி, அவருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தாா்.

இதையடுத்து, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உரிமை மீறல் குழுவினா் முன் பலராமன் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். சட்டப்பேரவைக்கு மாநில தோ்தல் ஆணையா் நியமனம் தொடா்பான அறிவிப்பு, அதுதொடா்பான ஆவணங்களுடன் அவா் விளக்கம் அளித்தாா்.

இதுதொடா்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘யாா் உத்தரவுப்படி விளம்பரம் வெளியிடப்பட்டது என்பதை சாா்புச் செயலா் உரிமைக்குழு முன் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, உள்ளாட்சித் துறை இயக்குநரும் அடுத்த வார இறுதியில் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அவா் விளக்கம் அளித்தபிறகே, அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து இக்குழு முடிவெடுக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com