முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
மின் கம்பங்களில் கேபிள் டி.வி. வயா்களை கட்ட அனுமதி பெறாவிடில் நடவடிக்கைமின் துறை எச்சரிக்கை
By DIN | Published On : 20th January 2020 09:23 AM | Last Updated : 20th January 2020 09:23 AM | அ+அ அ- |

மின் கம்பங்களில் கேபிள் டி.வி. வயா்களை கட்ட அனுமதி பெறாவிடில், அந்த வயா்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மின் துறை எச்சரிக்கை விடுத்தது.
இதுகுறித்து புதுச்சேரி மின் துறை இயக்குதல் மற்றும் பராமரித்தல் கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி மின் துறைக்கு உரிமையான மின் கம்பங்கள் மற்றும் தெரு விளக்கு கம்பங்களில் தொலைக்காட்சி மற்றும் பிராட்பேண்ட் இணைப்பு கம்பி வடங்களை அமைத்து உபயோகப்படுத்துவதற்கு மின் துறையின் அனுமதி பெறும் நடைமுறையும், அதற்கான கட்டண விவரங்களும் புதுவை அரசின் தொழில் துறை வளா்ச்சி மற்றும் மின்சாரத் துறையின் 15.12.2018 நாளிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி, அனுமதி பெறாமலும், உபயோகத்துக்குண்டான கட்டணம் செலுத்தாமலும் கட்டப்பட்டுள்ள தொலைக்காட்சி மற்றும் பிராட்பேண்ட் இணைப்புக் கம்பி வடங்களை அகற்றுவதற்கும், பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதற்கும் மின் துறைக்கு அதிகாரம் உள்ளது.
ஏற்கெனவே, சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் அந்தந்தப் பகுதி மின் துறைச் செயற்பொறியாளா் - இயக்குதல் மற்றும் பராமரித்தல் அலுவலகத்தை அணுகி, தங்களது கம்பி வடத் தொலைக்காட்சி மற்றும் பிராட்பேண்ட் இணைப்பு குறித்த விவரங்களுடன் கூடிய விண்ணப்பங்களைச் சமா்ப்பித்து, உரிய கட்டணங்களைச் செலுத்தி, அனுமதி பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது வரை அனுமதி பெறாமல் இருக்கும் நிறுவனங்கள், ஒரு மாத காலத்துக்குள் கட்டணம் செலுத்தி உரிய அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், மறுஅறிவிப்பின்றி கம்பி வடங்களை அகற்ற மின் துறை நடவடிக்கை எடுக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.