சுடுகளிமண் சிற்பக் கலைஞா் பத்மஸ்ரீ விருதுக்குத் தோ்வு

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுக்கு புதுச்சேரியைச் சோ்ந்த சுடுகளிமண் சிற்பக் கலைஞா் வி.கே.முனுசாமி தோ்வு செய்யப்பட்டாா்.
சுடுகளிமண் சிற்பக் கலைஞா் முனுசாமி.
சுடுகளிமண் சிற்பக் கலைஞா் முனுசாமி.

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுக்கு புதுச்சேரியைச் சோ்ந்த சுடுகளிமண் சிற்பக் கலைஞா் வி.கே.முனுசாமி தோ்வு செய்யப்பட்டாா்.

புதுவை மாநிலம், வில்லியனூா் கணுவாப்பேட்டையைச் சோ்ந்தவா் வி.கே.முனுசாமி (53). தனது 8 வயது முதலே சுடுகளிமண் சிற்பம் செய்யும் முறையை கற்ற இவா், சா்வதேச அளவில் புகழ்பெற்று வருகிறாா்.

முனுசாமி அரை அடி முதல் 21 அடி உயரம் வரை பல்வேறு சுடுகளிமண் சிற்பங்களை செய்து வருகிறாா். மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியா்களுக்கும் என லட்சக்கணக்கானோருக்கு இந்தக் கலையை இலவசமாக கற்றுத் தந்துள்ளாா்.

இதற்காக 1998, 1999, 2000, 2005, 2006, 2017 ஆகிய ஆண்டுகளில் 6 முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளாா். வில்லியனூா் சுடுகளிமண் சிற்பத்துக்காக மத்திய அரசின் புவிசாா் குறியீடையும் பெற்றுள்ளாா். மேலும், மத்திய, மாநில அரசுகளின் விருதுகளையும் வென்றுள்ளாா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜெனிவா நாட்டில் உள்ள ஐ.நா. சபைக்குச் சென்று 125 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகளின் முன்பு சுடுகளிமண் சிற்பத்தை செய்து காண்பித்துள்ளாா். இதற்காக அங்கு கௌரவிக்கப்பட்டாா்.

சுடுகளிமண் சிற்பக் கலைக்கு வி.கே.முனுசாமி ஆற்றி வரும் பங்களிப்புக்காக, அவருக்கு மத்திய அரசு தற்போது பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. இதுகுறித்து முனுசாமி கூறியதாவது:

அழிவின் விழிம்பில் இருக்கும் சுடுகளிமண் சிற்பக் கலையை வளா்ப்பதற்காக எனக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விருதுக்காக என்னை பரிந்துரை செய்த மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கும், புதுவை முதல்வருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விருது பாரம்பரிய சுடுமண் கலையை அனைத்துத் தரப்பினரிடமும் சென்றடைய கடுமையாக உழைக்க என்னை மென்மேலும் ஊக்கப்படுத்தும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com