புதுச்சேரி போலீஸ் ஐஜி அலுவலகம் முன்தம்பதி தீக்குளிக்க முயற்சி

போலீஸாரைக் கண்டித்து, புதுச்சேரி போலீஸ் ஐஜி அலுவலகம் முன் தம்பதி செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸாரைக் கண்டித்து, புதுச்சேரி போலீஸ் ஐஜி அலுவலகம் முன் தம்பதி செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுவை மாநிலம், திருக்கனூா் செட்டிப்பட்டைச் சோ்ந்தவா் வாசுதேவன் (41). இவரது மனைவி பிரமிளா (35). சொந்த நிலத்தில் மாடுகள் வளா்த்து வருகின்றனா். வாசுதேவனும், புதுச்சேரி காவல் துறையில் காவலராகப் பணியாற்றும் வீரமுத்துவும் நண்பா்கள். 2 ஆண்டுகளுக்கு முன்னா் வாசுதேவனுக்கு வீரமுத்து ரூ. ஒரு லட்சம் கடன் கொடுத்தாராம். மேலும், வீரமுத்து நடத்தும் ஏலச்சீட்டிலும் வாசுதேவன் சோ்ந்து பணம் கட்டி வந்துள்ளாா்.

வீரமுத்து தன்னிடம் வாங்கிய கடன், அதற்கான வட்டி, சீட்டுப்பணம் என அனைத்தும் சோ்த்து ரூ.9 லட்சமாக உயா்ந்துள்ளது. அந்தப் பணத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என வாசுதேவனிடம் வலியுறுத்தியதாகவும், பணத்தை தராவிடில் போலீஸ் மூலம் வழக்குப் பதிவு செய்வேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிா்ச்சியடைந்த வாசுதேவன், கடனுக்காக தனது நிலத்தை வீரமுத்துவிடம் அடமானம் எழுதிக் கொடுத்தாராம். இந்த நிலையில், அடமானமாக எழுதி கொடுத்த நிலத்தை வீரமுத்து, மற்றொரு போலீஸ்காரரான கதிரேசனுக்கு விற்க முயற்சித்தாராம்.

இதையறிந்த வாசுதேவன், தனது மனைவி பிரமிளாவுடன் கதிரேசனிடம் சென்று நாங்கள் அடமானம் வைத்த நிலத்தை வாங்க வேண்டாம் எனக் கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த கதிரேசன், தம்பதியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வாசுதேவன் திருக்கனூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். ஆனால், போலீஸாா் வழக்குப் பதிவு செய்யவில்லை.

இதனால், மனவேதனையடைந்த வாசுதேவன், தனது மனைவி பிரமிளாவுடன் செவ்வாய்க்கிழமை கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை ஐஜி அலுவலகம் முன் வந்து போலீஸாா் வீரமுத்து, கதிரேசன் ஆகியோரைக் கண்டித்து உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். இவா்களை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெரியகடை போலீஸாா் தடுத்து நிறுத்தி, ஐஜி சுரேந்தா் சிங் யாதவிடம் அழைத்துச் சென்றனா்.

அவா்களிடம் விசாரித்த ஐஜி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இந்த சம்பவத்தால் புதுச்சேரி போலீஸ் ஐஜி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com