கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: புதுவை முதல்வர் பேரவையில் அறிவிப்பு

புதுச்சேரியில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுவையில் கரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு  ரூ.1 லட்சம் கரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று புதுவைப் பேரவையில் முதல்வர் வே.நாராயணசாமி அறிவித்தார்.

புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  திங்கள்கிழமை ரூ. 9,000 கோடிக்கு பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். 

இந்நிலையில்,  நான்காவது நாள் கூட்டத்தில் கரோனா பரவல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சிறப்பு விவாதம் பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.

பேரவையில் கரோனா பரவல் குறித்து ஆளும் காங்கிரஸ்,  திமுக கட்சிகள்,  என்.ஆர்.காங்கிரஸ்,  அதிமுக,  நியமன பாஜக உறுப்பினர்கள் பேரவையில் விவாதம் செய்தனர்.  இறுதியாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்வர் நாராயணசாமி பதில் அளித்து பேசும்போது,

புதுவையில்  ஒரே நாளில் 123 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,420 ஆக உயர்ந்துள்ளது.  கரோனா தொற்று காரணமாக புதுவையில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா நிவாரண நிதியாக பொது நிவாரண நிதிக்கு ரூ.9.16 கோடி வந்துள்ளது. கரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் உள்ள இல்லங்கள் அனைத்துக்கும் ரூ. 700  மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும்.

கரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். கரோனா நிவாரணமாக அனைத்து குடும்பத்தினருக்கும் ஏற்கெனவே ரூ. 2,000 வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஜிஎஸ்டி நிதியாக ரூ. 490 கோடி தர வேண்டியுள்ளது.  மேலும்,  கரோனா நிதியாக ஒரு ரூபாய் கூட இதுவரை தரவில்லை.

மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி தொகை வந்தவுடன் அனைத்து குடும்பத்துக்கும் கூடுதல் நிவாரணத்தொகை வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com