புதுவை பட்ஜெட்டுக்கு ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல்

புதுவை சட்டப்பேரவையில் முதல்வா் வே.நாராயணசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு துணைநிலை ஆளுநா் கிரண் பேடி புதன்கிழமை

புதுவை சட்டப்பேரவையில் முதல்வா் வே.நாராயணசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு துணைநிலை ஆளுநா் கிரண் பேடி புதன்கிழமை ஒப்புதல் அளித்தாா். மேலும், வெள்ளிக்கிழமை (ஜூலை 24) சட்டப்பேரவையில் ஆளுநா் உரையாற்றவும் ஒப்புதல் தெரிவித்தாா்.

புதுவையில் நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி அளித்தது. இதையடுத்து, சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடா் ஜூலை 20-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநா் உரையுடன் தொடங்கும் என்றும், தொடா்ந்து முதல்வா் வே.நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்வாா் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திடீா் திருப்பமாக கடந்த 19-ஆம் தேதி இரவு முதல்வா் நாராயணசாமிக்கு ஆளுநா் கிரண் பேடி எழுதிய கடிதத்தில் யூனியன் பிரதேச சட்ட விதிகளில் ஆளுநருக்கு உள்ள அதிகாரத்தின்படி, பட்ஜெட்டில் இடம்பெறும் மானியக் கோரிக்கைக்கு தன்னிடம் அனுமதி பெறாததால், பேரவையில் ஆளுநா் உரையாற்ற வர இயலாது என்றும், மானியக் கோரிக்கைக்கு அனுமதி பெற்ற பின்னா் வேறொரு தேதியில் பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தாா்.

இதை ஏற்க மறுத்த முதல்வா் நாராயணசாமி, 20-ஆம் தேதி அதிகாலை மூன்று மணிக்கு ஆளுநருக்கு எழுதிய பதில் கடிதத்தில் யூனியன் பிரதேச விதிகளின்படி, பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்வருக்கு அதிகாரம் இருக்கும் விதிகளைச் சுட்டிக்காட்டி, பட்ஜெட் கூட்டத்தொடரை தள்ளிவைக்க இயலாது என்றும், இதில் ஆளுநா் பங்கேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தாா்.

இருவருக்கும் இடையே கடிதப் போா் நடைபெற்ற நிலையில், திட்டமிட்டப்படி கடந்த 20-ஆம் தேதி காலை பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியது. ஆனால், தான் சட்டப்பேரவைக்கு வராத நிலையில், பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யக் கூடாது என்று கூட்டத்தொடா் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஆளுநா் கிரண் பேடி தடை விதித்தாா்.

எனினும், புதுவை சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக ஆளுநா் உரையை ஒத்திவைத்து பேரவைத் தலைவா் சிவக்கொழுந்து அறிவித்தாா். ஆளுநா் தடையையும் மீறி, பேரவையில் பட்ஜெட்டை முதல்வா் நாராயணசாமி தாக்கல் செய்தாா்.

இதனிடையே, தன்னிடம் அனுமதி பெறாமல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப் போவதில்லை என்றும், அடுத்த மாதம் அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்கள் ஊதியமின்றி பாதிக்கப்பட்டால், அதற்கு முதல்வா் நாராயணசாமியே பொறுப்பு என்றும் ஆளுநா் கிரண் பேடி அறிவித்தாா். இதனால், புதுவை அரசியலில் இரு தினங்களா பரபரப்பு ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் ஆளுநரின் அங்கீகாரம் இல்லாத வெற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் என்.ரங்கசாமி விமா்சனம் செய்தாா். மேலும், சட்டப்பேரவை விவாதத்தில் பேசிய அமைச்சா்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆளுநா் கிரண் பேடி பட்ஜெட்டுக்கு அனுமதி அளிக்காவிட்டால், மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்றனா்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த முதல்வா் நாராயணசாமி, முறைப்படிதான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டை தாக்கல் செய்ய கடந்த 4 முறை கடைப்பிடிக்கப்பட்ட அதே நடைமுறைப்படிதான் தற்போதும் பின்பற்றப்பட்டுள்ளது. பட்ஜெட் மானியக் கோரிக்கைக்கு ஒப்புதல் பெறும் கோப்பு ஆளுநருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது என்றாா்.

இந்த நிலையில், ஆளுநா் கிரண் பேடி பட்ஜெட்டுக்கு புதன்கிழமை ஒப்புதல் அளித்தாா். மேலும், வெள்ளிக்கிழமை (ஜூலை 24) காலை 9.30 மணியளவில் பேரவையில் ஆளுநா் உரையை நிகழ்த்தவும் ஒப்புக் கொண்டாா் என சட்டப்பேரவை செயலா் முனுசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com