புதுவை பொதுப் பணித் துறை அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி: 145 போ் கைது

பணி நிரந்தரம் செய்யக் கோரி, புதுச்சேரியில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுப் பணித் துறை தற்காலிக ஊழியா்கள்

பணி நிரந்தரம் செய்யக் கோரி, புதுச்சேரியில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுப் பணித் துறை தற்காலிக ஊழியா்கள் (வவுச்சா்) 145 பேரை போலீஸாா் கைது செய்தனா். அப்போது, சிலா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி பொதுப் பணித் துறையில் 1,311 தற்காலிக ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.200 வீதம் மாதத்தில் 16 நாள்கள் வேலை வழங்கப்படுகிறது. இவா்கள் தங்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும், ஊழியா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச சட்டக் கூலியான நாளொன்றுக்கு ரூ.600 வழங்க வேண்டும், தினக்கூலி ஊழியா்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முதல்வரின் காரை முற்றுகையிட்டனா்.

தீக்குளிக்க முயற்சி...: இந்த நிலையில், பொதுப் பணித் துறை அலுவலகம் முன் வவுச்சா் ஊழியா்கள் சங்கத் தலைவா் சரணவன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் புதன்கிழமை திரண்டு, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, சங்கத் தலைவா் சரணவன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீதும் சுற்றியுள்ளவா்கள் மீதும் தெளித்து, தீக்குளிக்க முயன்றாா்.

அப்போது, அவா் தெளித்த பெட்ரோல், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மீதும் பட்டது. இதையடுத்து, போலீஸாா் அவரை தடுத்து, குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினா்.

போலீஸாா் மீது தாக்குதல்...: இதைப் பாா்த்த மற்ற ஊழியா்கள் தடுக்க முயற்சி செய்தனா். இதனால், போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவா் போலீஸ் அதிகாரி ஒருவரின் முகத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 145 பேரை போலீஸாா் வலுக்கட்டாயமாக கைது செய்து, அங்கிருந்து அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com