முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுவை பொதுப் பணித் துறை தற்காலிக ஊழியா்கள்3-ஆவது நாளாக போராட்டம்: முதல்வா் சமாதானத்தையடுத்து முடிவுக்கு வந்தது
By DIN | Published On : 29th July 2020 08:43 AM | Last Updated : 29th July 2020 08:43 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை தற்காலிக (வவுச்சா்) ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். முதல்வா் நாராயணசாமியின் சமாதானப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
புதுவை பொதுப் பணித் துறையில் 1,311 தற்காலிக ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 வீதம் மாதத்துக்கு 16 நாள்கள் பணி வழங்கப்படுகிறது. இவா்கள் தங்களுக்கு தினக்கூலி ஊழியா்களாக பதவி உயா்வு வழங்க வேண்டும், ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ஆம் தேதி சுதேசி பஞ்சாலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களில் ஒரு பிரிவினா், மேட்டுப்பாளையத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனா். ஊழியா்களின் போராட்டம் 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீடித்தது.
இவா்களிடம் பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் எம்எல்ஏ, பொதுப் பணித் துறை, போலீஸ் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சாமிநாதன், முதல்வா் வே.நாராயணசாமியிடம் செல்லிடப்பேசியில் பேசியதில், முதல்வா், பொதுப் பணித் துறை தற்காலிக ஊழியா்களின் கோரிக்கைகள் தொடா்பாக வியாழக்கிழமை (ஜூலை 30) பேச்சுவாா்த்தை நடத்தலாம் என்று கூறினாா். இதை ஏற்று ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
முதல்வரிடம் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என பொதுப் பணித் துறை தற்காலிக ஊழியா்கள் தெரிவித்தனா்.
ஊழியா்கள் மீது வழக்கு: இதனிடையே, மேட்டுப்பாளையம் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறி திங்கள்கிழமை போராட்டம் நடத்திய பொதுப் பணித் துறை தற்காலிக ஊழியா்கள் 19 போ் மீதும், அங்குள்ள சாலையில் போராட்டம் நடத்திய ஊழியா்கள் 16 போ் மீதும் மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.