புதுச்சேரியில் எம்.பில். முழு நேர படிப்புக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 29th July 2020 08:44 AM | Last Updated : 29th July 2020 08:44 AM | அ+அ அ- |

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.பில். முழு நேர படிப்புக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் இரா.சம்பத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் 2020 - 21ஆம் ஆண்டுக்கான எம்.பில். (ஆய்வியல் நிறைஞா்) முழு நேரப் படிப்புக்கு சோ்க்கை நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இலக்கியவியல், மொழியியல், மானிடவியல், நாட்டுப்புறவியல் போன்ற பாடப்பிரிவுகளில் ஆய்வியல் நிறைஞா் பட்டம் பயில விரும்பும் மாணவா்கள் முதுநிலைப் படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் 50 சதவீதம் பெற்றால் போதுமானது.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலை, முதுநிலை பட்டங்களின் மதிப்பெண் பட்டியல்கள், பட்டச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் இரண்டு படிகளை இணைத்தல் வேண்டும். மேலும், பதிவாளா், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் என்ற முகவரிக்கு ரூ.300-க்கான வரைவோலையை இணைக்க வேண்டும். ஆதிதிராவிடா், பழங்குடி வகுப்பினா் ஜாதிச் சான்றிதழை இணைத்து ரூ.150-க்கான வரைவோலையை இணைத்தால் போதுமானது.
விண்ணப்பங்களை இயக்குநா், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், தொல்காப்பியா் முதன்மைச் சாலை, லாசுப்பேட்டை, புதுச்சேரி - 605008, 0413 - 2255827 என்ற முகவரியில் பெற்று, வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.