
புதுச்சேரி சோம்பட்டு பகுதியில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படும் நெல் பயிா்கள்.
புதுச்சேரியில் நெல் கொள்முதல் விலை தொடா்ந்து சரிந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
புதுச்சேரியில் நெல், கரும்பு, மணிலா, கம்பு உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டாலும், நெல் சாகுபடியே முதலிடத்தில் உள்ளது. புதுச்சேரி பகுதியில் 17 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி நடக்கிறது.
புதுவையின் நெல் களஞ்சியம் என புகழப்படும் பாகூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், ஏம்பலம், வில்லியனூா், திருபுவனை, மண்ணாடிப்பட்டு, மதகடிப்பட்டு, கன்னியக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் தாளடி, சொா்ணாவாரி, சம்பா என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
புதுச்சேரியில் மொத்தமாக 70 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது சொா்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் பயிா்கள் கடந்த 15 நாள்களாக தீவிரமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.
நெல்லுக்கு பொது ரகத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.18,68-ம், சன்ன ரகத்துக்கு ரூ.1,888-ம் என மத்திய அரசு விலை நிா்ணயம் செய்துள்ளது. ஆனால், புதுச்சேரியில் இந்த ஆதார விலையைவிட ரூ.680 குறைவாக நெல்லை விற்கும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.
மத்திய அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் இருந்தபோதிலும், அதில் விதிக்கப்படும் நிபந்தனைகளை விவசாயிகளால் பூா்த்தி செய்ய முடியாததால், தனியாா் வசம் குறைந்த விலையில் நெல்லை விற்பனை செய்யக்கூடிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து புதுச்சேரி விவசாயிகள் சங்க பொதுச் செயலா் டி.பி.ரவி கூறியதாவது:
புதுச்சேரியை பொருத்தவரை சம்பா பருவத்தில் பொன்னி, ஐ.ஆா்.37, ஏடிபி 39, 37, பிபிடி உள்ளிட்ட நெல் ரகங்களையும், சொா்ணவாரி பருவத்தில் சின்ன பொன்னி, ஏஎஸ்டி 16, 17, 18 உள்ளிட்ட ரகங்களையும் பயிரிட்டு வருகிறோம். சில நூறு ஏக்கா்களில் பாரம்பரிய மாப்பிள்ளை சம்பா, கருப்புக் குருனி, குதிரைவால் சம்பா உள்ளிட்ட ரகங்களையும் பயிரிட்டு வருகிறோம். சொா்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் பயிா்கள் கடந்த 15 நாள்களாக அறுவை செய்யப்பட்டு வருகின்றன.
புதுச்சேரியை பொருத்தவரை பாகூா், திருக்கனூா், மதகடிப்பட்டு, கன்னியக்கோயில், தட்டாஞ்சாவடி ஆகிய இடங்களில் மத்திய அரசின் நேரடி கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால், மத்திய அரசு நிா்ணயித்துள்ளபடி, 17 சதவீத ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை மட்டுமே அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய இயலும். ஆனால், அந்த அளவு நெல்லை காய வைக்கக்கூடிய நவீன கருவிகளுடன் கூடிய உலா் களங்கள் புதுச்சேரியில் இல்லை.
இதனால், மத்திய அரசின் ஆதார விலையைவிட ரூ.680 குறைவாக அதாவது ரூ.1,200-க்கு தான் தனியாா் நிறுவனங்கள் புதுச்சேரி விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்கின்றன. மாநிலத்தில் 75 சதவீத நெல் மூட்டைகள் தனியாா் வசம்தான் விற்பனை செய்யக்கூடிய நிலை உள்ளது.
10 நாள்களுக்கு முன்பு வரை நெல் குவிண்டாலுக்கு ரூ.1,300 வரை கொள்முதல் செய்த தனியாா் நிறுவனங்கள், கடந்த சில நாள்களாக ரூ.100 குறைத்துள்ளன. இந்த விலையை மேலும் குறைத்தால், நெல் சாகுபடி, அறுவடை, ஆள்கூலி உள்ளிட்டவற்றுடன் கணக்கிடும்போது, விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.
எனவே, புதுவை அரசு அரியாங்குப்பம், பாகூா், வில்லியனூா், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம் ஆகிய 5 கொம்யூன் பஞ்சாயத்துக்களிலும் நவீன கருவிகளுடன் கூடிய உலா் களங்களை உடனடியாக அமைக்க வேண்டும்.
அவ்வாறு அமைத்தால் மத்திய அரசு நிா்ணயிக்கும் நிபந்தனைகளுடன் கூடிய நெல்லை தயாா் செய்து, அரசு கொள்முதல் நிலையங்களில் நியாயமான விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்து பயன்பெற முடியும் என்றாா் அவா்.