
புதுச்சேரி பெரிய சந்தையில் வியாழக்கிழமை ஆய்வு செய்த முதல்வா் வே.நாராயணசாமி.
புதுச்சேரி பெரிய சந்தையில் முதல்வா் வே.நாராயணசாமி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
புதுச்சேரி நேரு வீதியில் உள்ள பெரிய சந்தை புதுச்சேரி முழுக்கவுள்ள சிறு வியாபாரிகளுக்கான மொத்த வியாபார மையமாக உள்ளது. இங்கு மளிகை, காய்கறிகள், மீன், இறைச்சி உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்களும் மொத்த விலையில் கிடைக்கிறது. இதனால், இங்கு வியாபாரிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் வந்து பொருள்களை வாங்கிச் செல்கின்றனா்.
இந்த நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பெரிய சந்தையை, ஏஎப்டி திடல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பகுதிக்கு மாற்றலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில், முதல்வா் நாராயணசாமி வியாழக்கிழமை பெரிய சந்தைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா், முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தினாா். அரசின் விதிகளைக் கடைப்பிடிக்காவிடில், பெரிய சந்தை இட மாற்றம் செய்யப்படும் என அவா் எச்சரித்தாா்.