மீன்பிடி தடைக்கால நிவாரணம் கோரி புதுவை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு அதிமுக போராட்டம்

அனைத்து மீனவர்களுக்கும் தடைக்கால நிவாரண உதவி பெற வழங்ககோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் உப்பளம் தொகுதி அதிமுக சார்பில் இன்று நடைபெற்றது.
மீன்பிடி தடைக்கால நிவாரணம் கோரி புதுவை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு அதிமுக போராட்டம்

அனைத்து மீனவர்களுக்கும் தடைக்கால நிவாரண உதவி பெற வழங்ககோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் உப்பளம் தொகுதி அதிமுக சார்பில் இன்று நடைபெற்றது.

இந்த முற்றுகை போராட்டத்திற்காக உப்பளம் தொகுதி மீனவ மக்கள் சோனாம்பாளையம் பகுதியிலிருந்து அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் தலைமையில் ஆளுநர் மாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தைக் தொடர்ந்து ஆளுநர் மாளிகை அருகில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் பேசியதாவது:

திமுக துணையோடு புதுச்சேரியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசானது மீனவ நலனிற்காக எதையும் செய்யாமல், ஏற்கனவே நடைமுறையில் உள்ள மீன்பிடி தடைக்கால நிவாரண வழங்குவதிலும் புதிய, புதிய விதிமுறை உத்தரவுகளை பிறப்பித்து மீனவர்கள் உதவி பெறுவதை தடுக்கிறது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 23 ஆயிரம் மீனவ குடும்பங்கள் மீன்பிடி தடைக்கால உதவி பெற்று வந்தனர். 

இந்நிலையில் அதில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தகுதியற்றவர்களை நீக்கம் செய்து, கடந்த ஆண்டு 19 ஆயிரம் மீனவ குடும்பத்திற்கு தலா ரூ.5,500 மீன்பிடி தடைக்கால நிவாரண உதவியை அரசு வழங்கியது.

இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் இன்றுவரை மீன்பிடி தடைக்கால நிவாரண உதவியை அரசு வழங்காமல், மீனவர்களில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண உதவி வழங்க முடியாது என புதிய விதிமுறை அரசு அறிவித்துள்ளது.

அந்தவகையில் கடந்த ஆண்டு மீன்பிடி தடைக்கால நிவாரண உதவி பெற்ற சுமார் 19 ஆயிரம் நபர்களில் தற்போது சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியம் பெறும் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரண உதவி மறுக்கப்படுவது நியாயமற்ற செயலாகும். ஓய்வூதியம் பெறும் பிற சமுதாயத்தினர் அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் உதவி பெற்று வரும் நிலையில், அவர்களுக்கு ஒரு நியாயம் மீனவர்களுக்கு ஒரு நியாயமா?

 உப்பளம் தொகுதியில் மட்டும் கடந்த ஆண்டு மீன்பிடி தடைக்கால உதவி பெற்ற 932 நபர்கள் ஓய்வூதியம் பெறும் சுமார் 450 நபர்கள் நீக்கப்பட்டு 482 நபர்களுக்கு மட்டும் தடைக்கால நிவாரண உதவி வழங்கப்பட இருக்கிறது.

இது சம்பந்தமாக கடற்கரை பகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும்  முதல்வரிடம் தெரிவித்தும், இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. கரோனா பாதிப்பில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள இன்றைய சூழ்நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தடைக்கால நிவாரண உதவி வழங்கக்கூடாது என துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டதாக அரசு தரப்பில் கூறப்படுவது உண்மையாக இருந்தால், அது தவறான ஒன்றாகும்.

கரோனா பாதிப்பு இக்கால கட்டத்தில் அரசின் உதவியை பெற்று வந்தவர்களுக்கு புதிய புதியதாக நிர்பந்தத்தை விதித்து அவர்கள் உதவி பெறாமல் தடுப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.

 கண்ட கண்ட பிரச்னைகளுக்கெல்லாம் அமைச்சரவையை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்ற அறிக்கையை விடும் முதல்வர் ஏன் மீனவர்கள் பிரச்னையை அமைச்சரவையில் வைத்து, கடந்த ஆண்டு மீன்பிடி தடைக்கால நிவாரணம் பெற்றவர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு உதவித்தொகை வழங்கப்படும் என ஏன் அறிவிக்கவில்லை. மீனவர்களுக்கு எதிராக துணை நிலை ஆளுநர், ஆளும் அரசின் துரோகம் செய்து வருகிறது. 

தமிழக அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் உள்ள சுமார் . 1.85 லட்சம் மீனவ குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கியதோடு, ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் தலா ரூ.ஆயிரம் கரோனா சிறப்பு நிவாரண உதவியாக வழங்கியுள்ளார். ஆனால் புதுச்சேரி அரசு மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், இன்று வரை தடைக்கால நிவாரணத்தை வழங்காமல் மீனவர்களுக்கு துரோகம் செய்கிறது

மீனவர் நலனிற்காக எந்த சிறப்பு நிதியையும் இதுவரை வழங்கவும் இல்லை . மீனவர் நலனிற்காக செயல்படும் அரசாக தமிழக அதிமுக அரசு உள்ளது. மீனவர்களுக்கு எதிராக திமுக துணையோடு ஆட்சி நடத்தும் ஆளும் காங்கிரஸ் அரசின் செயல்பாடு உள்ளது. 

கடந்த ஆண்டு தடைக்கால நிவாரண உதவி பெற்ற அனைத்து மீனவர்களுக்கும் எவ்வித புதிய கணக்கெடுப்பும் இன்றி தடைக்கால நிவாரண நிதியை மனிதாபிமான அடிப்படையில் வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் பெறும் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரண நிதியை நிறுத்துவதால் அரசுக்கு ஒன்றும் பெரிய அளவில் நிதி சேமிப்பு ஏற்பட்டு விடாது. 
மொத்தமாக பார்த்தால் ரூ.2 கோடிதான் இதனால் மீதப்படும். மதுபான கொள்கையில் ஆயிரம் கோடி ரூபாயை ஆண்டுதோறும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் அரசு மீனவர்களுக்கு ரூ.2 கோடி விட்டு கொடுப்பதில் என்ன வந்துவிடப்போகிறது.

 தற்போது மீனவர்கள் நலனிற்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் அரசு மற்றும் துணை நிலை ஆளுநருக்கு எதிராக மீனவர்களை வைத்து கரோனா காலத்தில் நாங்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதற்கு அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பல முறை அரசிடம் பேசிப் பார்த்தும் வேறு வழியில்லாமல் வீதியில் இறங்கி போராட நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

 இதே நிலை நீடித்தால் மாநிலம் முழுவதும் உள்ள மீனவர்களை ஒன்று திரட்டி அதிமுகவின் தலைமையின் அனுமதி பெற்று அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும்  எதிராக அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார் அன்பழகன்.

முற்றுக்கை ஆர்ப்பாட்டத்தில் மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் தணிகாசலம், முருகன், செல்வம், சக்திவேல். ராஜமூர்த்தி, புண்ணியகோடி, பன்னீர்செல்வம், மணிபாரதி மற்றும் ஊர் பிரமுகர்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 சிறிது நேர போராட்டத்துக்கு பின் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com