புதுவையில் மீண்டும் முழு ஊரடங்கு? நாளை முடிவு எடுக்கப்படும் : நாராயணசாமி அறிவிப்பு

புதுவையில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புதுச்சேரி: புதுவையில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுவை முதல்வர் வே.நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: புதுவையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மட்டும் 250 பேருக்கு பரிசோதனை செய்ததில் 50  பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு அனுமதியின்றி வருபவர்களால் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வந்து உறவினர் வீடுகளில் பதுங்கி இருப்பவர்களை கண்டுபிடிக்க காவல்துறைக்கும் வருவாய் துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தாங்களாகவே சென்னையில் இருந்து  வந்தவர்கள் வீட்டில் இருந்தால் காவல்துறைக்கும் வருவாய் துறைக்கு தெரிவிக்க வேண்டும். இதுவரை கரோனா பாதிப்பில்லாத காரைக்கால், மாகே பகுதிகளிலும் இப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.  ஒரு நபருக்கு கரோனா பரிசோதனை செய்ய ரூ. 4500 ஆகிறது. நிதி  நெருக்கடியான நிலையிலும் கரோனா பரிசோதனையை அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கரோனாவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு புதுவை அரசு தள்ளப்பட்டுள்ளது.  எனவே இது குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக புதுச்சேரியில் பேரிடர் மேலாண்மை ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மிகவும் கடுமையானதாக இருக்கும். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com