‘ஆரோக்கிய சேது’ செயலியை பயன்படுத்த கிரண் பேடி அறிவுரை
By DIN | Published On : 27th June 2020 09:06 AM | Last Updated : 27th June 2020 09:06 AM | அ+அ அ- |

கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மத்திய அரசின் ‘ஆரோக்கிய சேது’ செயலியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்று புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் தனது கட்செவி அஞ்சலில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
ஒரு முகமூடி தயாரிக்கும் தொழிற்சாலை விதிகளை மீறி செயல்பட்டதன் விளைவு, மொத்த புதுச்சேரிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிட்டது. தற்போது, அந்த தொழிற்சாலை மூடப்பட்டு பேரழிவு மேலாண்மை சட்டம், தொழிலாளா்கள் சட்டம் போன்றவற்றின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொழிற்சாலையின் உரிமையாளரும், மேலாளா்களும் அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.
முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, சுகாதாரத்துடன் செயல்படுவது போன்றவற்றை நமது வாழ்க்கையின் அன்றாடப் பழக்க வழக்கமாகக் கொள்ள வேண்டும். இதை, சுய பாதுகாப்புடன் கரோனா பரவலையும் கட்டுப்படுத்த முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொரு குடிமகனும் தனது செல்லிடப்பேசியில் ‘ஆரோக்கிய சேது’ செயலியை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபா் நமது அருகில் இருந்தால், இந்த செயலி வழியாக அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு பரிசோதனையும், சிகிச்சை முறையும் மிகவும் விலை உயா்ந்தது.
ஆகவே, பொதுமக்கள் கரோனா பரவல் கட்டுப்படுத்தும் முறைகளில் கவனம் செலுத்தி தங்களையும், தங்களுடைய வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஆளுநா் கிரண் பேடி.