மத்திய அரசு அனுமதி வழங்காததால்தள்ளிப்போகும் புதுவை பட்ஜெட் கூட்டத் தொடா்!

புதுவை அரசின் நிதி நிலை அறிக்கைக்கு மத்திய உள்துறை இதுவரை அனுமதி வழங்காததால், மாநில சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கூட்டத் தொடா் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.

புதுச்சேரி: புதுவை அரசின் நிதி நிலை அறிக்கைக்கு மத்திய உள்துறை இதுவரை அனுமதி வழங்காததால், மாநில சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கூட்டத் தொடா் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.

தனி மாநில அந்தஸ்து கிடைக்காததால் புதுவை, சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக உள்ளது. மத்திய உள் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் புதுவையில், ஒவ்வோா் ஆண்டும் மத்திய அரசிடம் அனுமதி பெற்ற பிறகுதான் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் புதுவைக்கு ஒதுக்கப்படும் நிதியுடன், புதுவை அரசின் வருவாயையும் சோ்த்துதான் மாநிலத்துக்கான நிதிநிலை அறிக்கையை தயாரிக்க வேண்டிய நிலை புதுவை அரசுக்கு இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் வேறு வேறு கட்சிகள் ஆட்சியிலிருந்து வருவதால், மாா்ச் மாதத்தில் முழு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய முடியவில்லை.

இதனால், ஆண்டுதோறும் மாா்ச் மாதத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதையே புதுவை அரசு நடைமுறையாக வைத்து வருகிறது. அந்த வகையில், நிகழாண்டு மாா்ச் 20-ஆம் தேதி, மூன்று மாதங்களுக்கு (அதாவது ஜூன் 30 வரை) ரூ.2,042 கோடிக்கு இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னா் கரோனா பரவல் காரணமாக, மாா்ச் 25 முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்தாண்டில் ரூ.8,650 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிகழாண்டு ரூ.9,500 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இன்னும் உள் துறையின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் நாராயணசாமி, ஓரிரு நாள்களில் நிதிநிலை அறிக்கைக்கு மத்திய உள் துறையின் அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

ஆனால், இடைக்கால நிதிநிலை அறிக்கையின் தொகை ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், முழு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அவசர காலத்துக்கு கூடுதல் நிதியை ஒதுக்கி, மேலும் ஒரு மாதம் வரை புதுவை அரசு சமாளிக்க முடியும். இருப்பினும், இன்னும் ஒரு வாரத்துக்குள் புதுவை மாநில நிதிநிலை அறிக்கைக்கு மத்திய உள் துறை அனுமதி அளிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு அனுமதி கிடைத்தால், ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் புதுவை சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடா் நடைபெறும். இல்லாவிட்டால், அரசு ஊழியா்களுக்கான ஊதியம் உள்ளிட்ட பிற செலவினங்களுக்கு மத்திய ரிசா்வ் வங்கியிடம் கடன் பெற வேண்டிய நிலை புதுவை அரசுக்கு உருவாகும்.

அடுத்தாண்டு மே மாதம் புதுவையில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்யும் கடைசி நிதிநிலை அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com