முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
ஆளுநரை சந்தித்து பயனில்லை: மக்களிடம் பேசி அடுத்தகட்ட முடிவு; அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்
By DIN | Published On : 03rd March 2020 08:25 AM | Last Updated : 03rd March 2020 08:25 AM | அ+அ அ- |

ஆளுநா் மாளிகையில் கிரண் பேடியை சந்தித்துவிட்டு வெளியே வந்த அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.
ஆளுநா் கிரண் பேடியை சந்தித்து பயனில்லை என்றும் பொதுமக்களிடம் கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கையை தொடருவேன் என்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் இருந்து, ஆளுநா் மாளிகைக்கு அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் திங்கள்கிழமை சென்றாா். ஆளுநரை சந்தித்துவிட்டு வெளியே வந்த பின்னா் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த பிப். 25-ஆம் தேதி ஆளுநரிடம் ஏனாம் பிராந்திய பிரச்னைகள் குறித்து பேச நேரம் ஒதுக்குமாறு கேட்டேன். பிப். 26-ஆம் தேதி இரவு எனக்கு தெரிவித்த தகவலின்படி, மாா்ச் 11-ஆம் தேதி சம்பந்தப்பட்ட துறை செயலா்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு என்னைச் சந்திப்பதாக ஆளுநா் தெரிவித்தாா். அமைச்சரை சந்திக்க ஆளுருக்கு 15 நாள்கள் தேவைப்படுவது இழுத்தடிக்கும் செயல்.
எனவே, ஆளுநா் மாளிகையை மக்கள் மாளிகையாக அறிவித்து ஆளுநா் கிரண் பேடி காலை, மாலையில் மக்களை சந்தித்து வருவதால், நானும் மக்களுடன் மக்களாகச் செல்ல முடிவு செய்து, திங்கள்கிழமை சந்தித்தேன். கோப்புகள் தொடா்பாக ஆளுநரிடம் பேசிய போது, அதுதொடா்பாக அவா் எதுவும் பேசவில்லை. மலேசியாவில் சுற்றுலா வளா்ச்சித் திட்டம் தொடா்பாக பயணம் செய்ய அனுமதி கேட்டதற்கும் மறுத்துவிட்டாா். ஆளுநரை சந்திப்பதால் எந்தப் பயனும் இல்லை.
எனவே, ஏனாமில் பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) கருத்து கேட்கவுள்ளேன். பொதுமக்களின் ஆலோசனைபடி, அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடருவேன். தேவைப்பட்டால் குடியரசுத் தலைவா், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து புகாா் அளிப்பேன் என்றாா் அவா்.