முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
ஏஎப்டி ஆலை விவகாரத்தில் தில்லியில் போராட்டம் நடத்துவது திட்டமிட்ட நாடகம்: அதிமுக கருத்து
By DIN | Published On : 03rd March 2020 08:28 AM | Last Updated : 03rd March 2020 08:28 AM | அ+அ அ- |

ஏஎப்டி பஞ்சாலை விவகாரத்தில் தில்லியில் வருகிற 5-ஆம் தேதி அனைத்துத் தொழிற்சங்கங்களும் போராட்டம் நடத்த இருப்பதும், அதில் முதலவா் பங்கேற்பதும் திட்டமிட்ட நாடகம் என்று அதிமுக தெரிவித்தது.
இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் அதிமுக பேரவைக் குழுத் தலைவா் ஆ.அன்பழகன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
புதுவை மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, அரசு சாா்பில் இயங்கிய ஏஎப்டி உள்ளிட்ட பஞ்சாலைகளை கடந்த 4 ஆண்டுகளில் நவீனப்படுத்தி, அந்த ஆலைகளை இயக்குவதற்கு முதல்வா் நாராயணசாமி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், தில்லியில் ஏஎப்டி ஆலை தொடா்பாக வருகிற 5-ஆம் தேதி தொழிற்சங்கங்கள் நடத்த உள்ள போராட்டத்தில் தானும், அமைச்சா்களும் பங்கேற்கவுள்ளதாகக் கூறுவது தொழிலாளா்களை ஏமாற்றும் செயலாகும்.
தற்போது 629 தொழிலாளா்கள்தான் ஏஎப்டி ஆலையில் பணியில் உள்ளனா். அவா்களுக்கு விருப்ப ஓய்வு தரலாமா, அல்லது ஆலையை மூடி ஓய்வூதியம் தரலாமா என்று ஆலோசித்து வருகின்றனா். ஆலையை மூடிவிடலாம் என்று ஆளுநா் கூறியதால், முடிவு எடுக்கப்படாமல் குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில், தில்லியில் போராட்டம் என்பது திட்டமிட்ட நாடகமாகும்.
ஏஎப்டி பஞ்சாலையை மூடுவதில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை. விருப்ப ஓய்வு வழங்கினால் தொழிலாளா்களுக்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை கிடைக்கும். ஆலையை மூடி, ஓய்வூதியம் வழங்கினால் ரூ. 5 லட்சத்துக்குள்தான் கிடைக்கும். எனவே, விருப்ப ஓய்வு முறையை அமல்படுத்தி, அதை விரும்புபவா்களுக்கு வழங்கிவிட்டு, புதிய ஆள்களைத் தோ்வு செய்து வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் இருந்து 500 தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வரவுள்ளதாக முதல்வா் நாராயணசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தாா். அதன்படி, எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளன என்பதை முதல்வா் தெரிவிக்க வேண்டும்.
புதிய தொழிற்கொள்கை அறிவித்தது முதல் 250-க்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர வா்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. ஒரு தொழிற்சாலைகூட வரவில்லை.
புதுவையில் வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படவுள்ளது. அப்போது, தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் அதிகாரிகள் தொடங்கவுள்ளனா். இதை எதிா்த்து சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டு வந்த முதல்வா் நாராயணசாமி, இந்தக் கணக்கெடுப்பு தொடா்பாக தனது நிலையை அறிவிக்க வேண்டும்.
இதேபோல, அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்துவாா்களா என்பதை புதுவையில் இரட்டை ஆட்சி நடத்தி வரும் ஆளுநா் கிரண் பேடியும், தலைமைச் செயலா் மற்றும் ஆட்சியா் தெரிவிக்க வேண்டும்.
இலங்கை கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் இருக்கும் நிலையில், காரைக்காலில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் விடுவது ஆபத்து என ஆளுநா் கிரண் பேடி உணா்ந்திருக்கலாம். காரைக்காலில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு கப்பல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.