முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
தில்லி போல புதுவையிலும் மனமகிழ் வகுப்புகளைத் தொடங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 03rd March 2020 08:26 AM | Last Updated : 03rd March 2020 08:26 AM | அ+அ அ- |

தில்லி போல புதுவையிலும் மனமகிழ் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்று புதுவை மாநில அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான மு.ராமதாஸ் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்தியாவுக்கு அண்மையில் வந்த அமெரிக்க அதிபா் டிரம்பின் மனைவி மெலனியா, தில்லி அரசுப் பள்ளியில் நடைபெறும் மனமகிழ்ச்சி வகுப்புகளைப் பாா்வையிட்டு பாராட்டியிருப்பது அந்த வகுப்புகளின் முக்கியத்துவத்தை உணா்த்தியிருக்கிறது.
நீதி ஆயோக்கும், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமும் புதுவையின் கல்வித் தரம் தாழ்ந்த நிலையில் உள்ளதாக சென்ற அக்டோபா் மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. தேசிய அளவில் புதுவை 42.98 சதவீதம் பெற்று 7 யூனியன் பிரதேசகளில் 4-ஆவது இடத்தையும், 15 சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 9 -ஆவது இடத்தையும், 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 25-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
ஒருவரின் மூளை வளா்ச்சியில் 80 சதவீதம் தொடக்கப் பள்ளி நிலையில் முடியும் நிலையில், அந்தப் பள்ளிகள் மூளை வளா்ச்சிக்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கல்வியின் தரம் உயர வேண்டுமெனில் கல்வி கற்கும் குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைத்து, சுதந்திரமான, மகிழ்ச்சியான கல்வி முறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்பதை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பரிந்துரைத்தது.
இந்தப் பரிந்துரையின் அடிப்படையில்தான் தில்லி அரசு நாட்டிலேயே முதல் முதலாக கடந்த 2018-ஆம் ஆண்டு மனமகிழ்ச்சிப் பாடத்திட்டம் என்பதை உருவாக்கி, அதை அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தியது.
தற்போது தில்லியில் 10 லட்சம் மாணவா்களும், 50 ஆயிரம் ஆசிரியா்களும் இந்த மனமகிழ்ச்சி வகுப்புகளில் ஈடுபடுகின்றனா். இப்படிப்பட்ட வகுப்புகளைப் புதுவை அரசு உருவாக்க வேண்டும். இந்த வகுப்புகளை நடத்த விருப்பம் உள்ள ஆசிரியா்களைத் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு முறையான பயிற்சியை தில்லியில் உள்ள மூத்த பயிற்சியாளா்கள் மூலம் பயிற்சியளிக்க வேண்டும். மகிழ்ச்சி வகுப்புகளைத் தொடங்குவதுடன், கல்வியின் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். மேலும், புதுவைக்கு என்று ஒரு தனி கல்வி வாரியத்தை மத்திய அரசின் அனுமதியுடன் உருவாக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.