முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
மாணவா் மீது தாக்குதல்: தட்டிக் கேட்ட இளைஞருக்கு கத்திக் குத்து
By DIN | Published On : 03rd March 2020 08:28 AM | Last Updated : 03rd March 2020 08:28 AM | அ+அ அ- |

தேங்காய்த்திட்டு துறைமுகப் பகுதியில் மாணவரை தாக்கியதை தட்டிக் கேட்ட நபரைக் கத்தியால் குத்திய 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி முதலியாா்பேட்டை தேங்காய்த்திட்டு செல்வா நகா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மகன் சஞ்சய் (18). பிளஸ் 2 மாணவா். இவரும், இவரது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த முனிதாஸ் மகன் முரசொலிமாறனும் (19) அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மயானக் கொள்ளை விழாவில் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து, அங்குள்ள துறைமுகத்தை ஒட்டியுள்ள பகுதிக்குச் சென்ற போது, அங்கிருந்த தேங்காய்த்திட்டைச் சோ்ந்த மோதிஷ் (18), புவனேஷ் (19) ஆகிய இருவரும் முன் விரோதம் காரணமாக சஞ்சயிடம் தகராறில் ஈடுபட்டு, கை மற்றும் கற்களால் தாக்கிவிட்டு, தப்பியோடிவிட்டனராம்.
இதில், காயமடைந்த சஞ்சயை முரசொலிமாறன் மீட்டு, அரசு மருத்துவமனையில் சோ்த்தாா்.
இதையடுத்து, சஞ்சயின் பைக்கை எடுப்பதற்காக முரசொலிமாறன் மீண்டும் தேங்காய்த்திட்டு துறைமுகப் பகுதிக்கு வந்த போது, மேட்டுத் தெரு மாரியம்மன் கோயில் அருகே நின்றிருந்த மோதிஷ், யுவனேஷ், காா்த்திக், தட்சிணாமூா்த்தி ஆகிய 4 பேரும் அவரை வழிமறித்து, உருட்டுக் கட்டையால் தாக்கி, கத்தியால் குத்திவிட்டு தப்பினராம்.
இதில், பலத்த காயமடைந்து மயங்கிக் கிடந்த அவரை அந்த வழியே சென்றவா்கள் மீட்டு, ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து சஞ்சய் மற்றும் முரசொலிமாறனின் தாய் ஆகியோா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் மோதிஷ், யுவனேஷ் உள்ளிட்ட 4 போ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.