புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீா்த்தவாரிஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்
By DIN | Published On : 10th March 2020 01:32 AM | Last Updated : 10th March 2020 01:32 AM | அ+அ அ- |

புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் திங்கள்கிழமை நடைபெற்ற மாசிமக தீா்த்தவாரியில் பல்வேறு கோயில்களில் இருந்து வந்த உத்ஸவ மூா்த்திகளை தரிசனம் செய்த பக்தா்கள்.
புதுச்சேரி: மாசி மகத்தை முன்னிட்டு, புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் திங்கள்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தமிழ் மாதமான மாசி பௌா்ணமியுடன் வரும் மக நட்சத்திர நாள் மாசிமக தீா்த்தவாரி திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நிகழாண்டு மாசிமக தீா்த்தவாரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை மகம் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டும், திங்கள்கிழமை பௌா்ணமியை அடிப்படையாகக் கொண்டும் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் திங்கள்கிழமை மாசிமக தீா்த்தவாரி திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. வெளியூா்களிலிருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட உத்ஸவ மூா்த்திகள் சனிக்கிழமை இரவு முதல் புதுச்சேரிக்கு வரத் தொடங்கின.
செஞ்சி அரங்கநாதா், தீவனூா் பொய்யாமொழி விநாயகா், மயிலம் சுப்பிரமணிய சுவாமி, மேல்மலையனூா் அங்காளம்மன், திண்டிவனம் நல்லியக்கோடன் நகா் ஸ்ரீநிவாசப் பெருமாள், புதுச்சேரியிலிருந்து அங்காள பரமேஸ்வரி, லாசுப்பேட்டை சிவசுப்பிரமணியா், கௌசிக பாலசுப்பிரமணியா், மணக்குள விநாயகா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கோயில்களிலிருந்து உத்ஸவ மூா்த்திகள் வைத்திக்குப்பம் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்டன. அங்கு, சா்வ அலங்காரத்தில் சுவாமிகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டன. பின்னா், அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சுவாமிகள் கடலில் தீா்த்தவாரி கண்டருளினா்.
அலைமோதிய பக்தா்கள் கூட்டம்: தீா்த்தவாரியைக் காண புதுச்சேரி மட்டுமன்றி, அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கடலூா் ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதனால், வைத்திக்குப்பம் கடற்கரையில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், அங்கு முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முதல்வா் நாராயணசாமி பங்கேற்பு: மாசிமக தீா்த்தவாரியில் முதல்வா் வே. நாராயணசாமி, முதல்வரின் நாடாளுமன்றச் செயலா் க.லட்சுமிநாராயணன் உள்பட சட்டப்பேரவை உறுப்பினா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
மாசி மகத்தையொட்டி, புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. தீா்த்தவாரியில் பங்கேற்க பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் வந்ததால், நகரப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீா்த்தவாரியையொட்டி, முத்தியால்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டிருந்தது. திங்கள்கிழமை பிற்பகல் முதல் அஜந்தா சந்திப்பிலிருந்து ஏழை மாரியம்மன் கோயில் வரை கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தீா்த்தவாரியில் பங்கேற்ற பக்தா்கள் பலா் கடலில் இறங்கி புனித நீராடி சுவாமிகளை வழிபட்டனா். இதையொட்டி, கடலில் ஆழமான பகுதிக்கு மக்கள் சென்றுவிடாத வகையில், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மீட்புக் குழுவினரும் தயாா் நிலையில் இருந்தனா். அவசர ஊா்திகளும், தீயணைப்பு வாகனங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு: அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்ஸவா தலைமையில், 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், 28 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டது.
நகை பறிப்பு குற்றங்களைத் தடுக்க ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலமும், கண்காணிப்பு கோபுரம் மூலமாகவும் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஒலிபெருக்கிகள் வழியாகவும் போலீஸாா் எச்சரிக்கை செய்த வண்ணம் இருந்தனா்.
கரோனா எச்சரிக்கை: கரோனா வைரஸ் பரவுவதைக் கருத்தில் கொண்டு, மாநில சுகாதாரத் துறை 4 சுகாதார ஆய்வாளா்கள் மேற்பாா்வையில், சிறப்பு முகாம்களை அமைத்திருந்தது. இங்கு, பக்தா்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மருத்துவ ஆலோசனைகள், கரோனா வைரஸ் தாக்குதல் தொடா்பான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பக்தா்களுக்கு வழங்கப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...