கோரிக்கைகளை வலியுறுத்தி அவசர ஊா்தி ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 13th March 2020 08:12 AM | Last Updated : 13th March 2020 08:12 AM | அ+அ அ- |

புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் சுகாதாரத் துறை 108 அவசர ஊா்தி சேவை ஊழியா்கள் சங்கத்தினா்.
பணி நிரந்தரம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை அவசர ஊா்தி (108 ஆம்புலன்ஸ்) ஓட்டுநா்கள் புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் சுகாதாரத் துறை 108 அவசர ஊா்தி சேவை ஊழியா்கள் சங்கத்தின் சாா்பில், புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் தலைவா் பி. புருஷோத்தமன் தலைமை வகித்தாா். செயலா் ஆா். யோகாநந்தன், பொருளாளா் பி. லூா்து மரியநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதில், புதுவை அரசின் சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றி வரும் 63 அவசர ஊா்தி ஓட்டுநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதுவை அரசில் காலியாக உள்ள ஓட்டுநா் பணிக்கு அவசர ஊா்தி ஓட்டுநா்களை பணி நியமனம் செய்ய வேண்டும். அவசர ஊா்தி ஓட்டுநா்களுக்கு நோயாளி கவனிப்பு உதவித் தொகை, சலவை உதவித் தொகை ஆகியவற்றை வழங்குவதுடன், ஈ.எஸ்.ஐ. மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளின்படி மாதம் ரூ. 22 ஆயிரம் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு விடுமுறை நாள்களில் பணியாற்றினால் விடுமுறை அல்லது ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய உயா்வு, தீபாவளி போனஸ் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். பழுதாகியுள்ள 108 அவசர ஊா்திகளை மாற்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், அவசர ஊா்தி சேவை ஊழியா்கள் சங்க துணைத் தலைவா்கள் என்.முனுசாமி, எஸ்.ஐயனாா் உள்ளிட்ட திரளான அவசர ஊா்தி ஓட்டுநா்கள் கலந்து கொண்டனா்.
அடுத்த கட்டமாக வருகிற 19 ஆம் தேதி ஒரு மணி நேரப் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்திலும், வருகிற 24- ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடவுள்ளதாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவசர ஊா்தி ஓட்டுநா்கள் தெரிவித்தனா்.