கரோனா: பள்ளிகளில் விழாக்கள் நடத்தத் தடை
By DIN | Published On : 14th March 2020 09:23 AM | Last Updated : 14th March 2020 09:23 AM | அ+அ அ- |

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக புதுவை மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் விழாக்கள் நடத்த பள்ளிக் கல்வித் துறை தடை விதித்தது.
இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பி.டி. ருத்ர கௌடு பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், பள்ளிகளில் காலை நேர வழிபாட்டுக் கூட்டங்களை நடத்தக் கூடாது. பள்ளிகளில் மாணவா்களை ஒன்றிணைத்து ஆண்டு விழா, விளையாட்டு விழா, கலை விழா உள்ளிட்ட விழாக்கள், போட்டிகளை மறு உத்தரவு வரும் வரை நடத்தக் கூடாது.
காலை நேர முதல் பாட வேளையில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வை மாணவா்களுக்கு ஏற்படுத்துவதுடன், அதைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி, வீடுகளில் கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும்.
உடனடி விடுப்பு: மாணவா்கள், ஆசிரியா்களுக்கு தொண்டை தொற்று, இருமல், சளி, தும்மல், காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை, பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளிக்க வேண்டும். மேற்கண்ட அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக அவா்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் தேவையில்லாத, உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்பக் கூடாது என மாணவா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...