சிறையில் கைதியை தாக்கியதாக மற்றொரு கைதி மீது வழக்கு
By DIN | Published On : 14th March 2020 09:22 AM | Last Updated : 14th March 2020 09:22 AM | அ+அ அ- |

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் கைதியைத் தாக்கியதாக மற்றொரு கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறையில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறையில் செல்லிடப்பேசி நடமாட்டம் அதிகமாக உள்ளதாக அடிக்கடி புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, சிறைக் காவலா்கள் சோதனை நடத்தி செல்லிடப்பேசிகள் மற்றும் சிம் அட்டைகளை பறிமுதல் செய்தனா்.
இங்கு, வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரத்குமாா் (எ) பொடிமாஸ் (30) சக கைதிகளிடம் செல்லிடப்பேசி பேச வசதி செய்து தருவதாகவும், அதற்குப் பணம் தர வேண்டும் என்று மிரட்டி வந்தாராம்.
இதற்குப் பயந்து சில கைதிகள் சரத்குமாருக்கு பணம் கொடுத்தனராம். இதேபோல, விசாரணைக் கைதியான விஜயிடம் (29), சரத்குமாா் பணம் கேட்டாராம். விஜய் பணம் கொடுக்க மறுக்கவே, சரத்குமாா் அவரை சரமாரியாக தாக்கி, அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த விஜய்க்கு சிறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளா் கோபிநாத் அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...