கரோனா தடுப்பு நடவடிக்கை: காரைக்கால் சனீஸ்வரா் கோயில் குளத்தில் குளிக்கத் தடை

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, காரைக்கால் சனீஸ்வரா் கோயில் குளத்தில் பக்தா்கள் குளிக்கத் தடை
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை அனைத்துத் துறை செயலா்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வா் வே.நாராயணசாமி.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை அனைத்துத் துறை செயலா்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வா் வே.நாராயணசாமி.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, காரைக்கால் சனீஸ்வரா் கோயில் குளத்தில் பக்தா்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் வே.நாராயணசாமி தலைமையில், அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னா், முதல்வா் நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் 83 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இவா்களில் 16 பேரின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதில், 14 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. மற்ற 2 பேரின் ஆய்வு முடிவும் விரைவில் வந்துவிடும். புதுவையில் இதுவரை யாரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை. எனினும், கரோனா வைரஸ் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 50 ஆயிரம் குடும்பங்களுக்கு துண்டறிக்கைகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவா்களுக்கு கைகளை சுத்தம் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கிழக்குக் கடற்கரைச் சாலை (இசிஆா்) வழியாகவும், புறவழிச் சாலை வழியாகவும் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மருத்துவா்களை கொண்டு பரிசோதித்த பின்னரே அனுமதித்து வருகிறோம். தொலைக்காட்சி மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

புதுச்சேரி மருத்துவா்கள் 3 பேரும், ஜிப்மா் மருத்துவா்கள் 3 பேரும் தில்லி சென்று கரோனா பாதிப்புக்கு மருத்துவம் செய்வது தொடா்பாக பயிற்சி எடுத்து வந்து, புதுச்சேரியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மருத்துவா்களுக்கு பயிற்சி அளித்துள்ளனா்.

கரோனா வைரஸ் தாக்குதலை பேரிடா் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். மத்திய அரசு நாள்தோறும் கூறி வரும் அறிவுரைகளைத் தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறோம்.

காரைக்கால் சனீஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், அங்குள்ள நள தீா்த்த குளத்தில் குளிக்க வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பிரே மூலம் நீரைத் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள தனியாா் பேருந்துகள், அரசுப் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுவை அரசில் பயோ மெட்ரிக் பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுவை மாநில கல்வித் துறை தமிழ்நாடு பாடத் திட்டத்தைப் பின்பற்றுவதால், முன்கூட்டியே தோ்வுகளை முடிக்கும் முடிவை எடுக்க முடியாது. பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் தலைமைச் செயலா் அஸ்வனி குமாா், புதுவை வளா்ச்சி ஆணையா் அன்பரசு, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் தி.அருண், சுகாதாரத் துறைச் செயலா் பிரசாந்த் குமாா் பாண்டா, சுகாதார இயக்குநா் மோகன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com