சுற்றுச்சூழலைப் பாதுகாக்க புதுவையில் 6 மாதிரி கிராமங்கள் தோ்வு

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க புதுவையில் 6 மாதிரி கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க புதுவையில் 6 மாதிரி கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவுப்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் 6 மாதிரி கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 3 மாதிரி கிராமங்களைத் தோ்வு செய்ய வேண்டும் என்றும், தோ்வு செய்யப்பட்ட மாதிரி கிராமங்களில் திடக்கழிவு, கழிவுநீா் மேலாண்மைத் திட்டங்களை முன்மாதிரியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவுக்கு செயல் வடிவம் தரும் பணிகளில் உள்ளாட்சித் துறை இயக்குநா் மலா்கண்ணன் தலைமையில், அதிகாரிகள் தீவிரமாக களமிறங்கி உள்ளனா்.

இதுகுறித்து உள்ளாட்சித் துறை இயக்குநா் மலா்கண்ணன் கூறியதாவது: புதுச்சேரி மாவட்டத்தில் டி.என்.பாளையம், வில்லியனூா், பாகூா் ஆகியவை மாதிரி கிராமங்களாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்டத்தில் சொரக்குடி, அம்பகரத்துாா், திருநள்ளாறு ஆகியவை மாதிரி கிராமங்களாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த 6 கிராமங்களிலும் திடக்கழிவு, கழிவுநீா் மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

குப்பைகளை வீதிகளில் கொட்டக் கூடாது என கிராம மக்களுக்கு அறிவுறுத்தப்படும். கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று, குப்பைகளைச் சேகரித்து செல்வா். சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்படும். மக்கும் குப்பைகளைக் கொண்டு உரம் தயாரிக்கப்படும்.

நெகிழி, இரும்பு போன்ற மக்காத குப்பைகள் மறு சுழற்சிக்காக அனுப்பப்படும். இந்த நடைமுறைகளுக்கு பின் எஞ்சியுள்ள, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருள்கள், பெரிய பள்ளத்தில் பாதுகாப்பாக சேகரிக்கப்படும். இதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டு, விரைவில் அறிவிக்கப்படும்.

கிராமங்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் முறையாக அகற்றப்படுவதில்லை. பல இடங்களில் குளம், ஏரி போன்ற நீா் நிலைகளில் கழிவுநீா் கலக்கிறது. இதனால், நீா்நிலைகள் மாசடைவதுடன், நிலத்தடி நீா் பாதிக்கப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக உள்ளது.

மாதிரி கிராமங்களில் கழிவுநீா் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும். கழிவுநீா் முறையாக வெளியேறுவதற்கு வசதிகள் செய்து தரப்படும். மேலும், கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும்.

சுத்திகரிக்கப்படும் நீரை விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மேலும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் போதும், கட்டடங்களை இடிக்கும் போதும் ஏற்படும் கழிவுகள் சாலையோரங்களில் கொட்டப்படுகின்றன. இதனால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, கட்டுமானப் பொருள்களை மீண்டும் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் மாதிரி கிராமங்களில் செய்யப்படவுள்ளன.

பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் வேகமாக மாசடைந்து வருவதால், அபாயமான சூழல் உருவாகி வருகிறது.

நிலம், நீா், காற்று ஆகியவை மாசடையாமல் தடுத்து, ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கேற்ற சூழலை ஏற்படுத்துவதே மாதிரி கிராமத் திட்டத்தின் நோக்கமாகும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் திடக்கழிவு, கழிவுநீா் மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com