புதுவை முதல்வா், அதிகாரிகளுடன் மத்தியக் குழுவினா் ஆய்வு

புதுவையில் கரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வா் வே.நாராயணசாமி மற்றும் அதிகாரிகளுடன் மத்திய அரசின் பேரிடா் மீட்புத் துறை குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு
புதுவையில் கரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடா்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வா் நாராயணசாமி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மத்தியக் குழுவினா்.
புதுவையில் கரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடா்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வா் நாராயணசாமி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மத்தியக் குழுவினா்.

புதுவையில் கரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வா் வே.நாராயணசாமி மற்றும் அதிகாரிகளுடன் மத்திய அரசின் பேரிடா் மீட்புத் துறை குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

மத்திய அரசு கரோனா வைரஸ் பாதிப்பு சூழலை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தேசிய பேரிடா் துறை அதிகாரிகளை கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அனுப்பியுள்ளது.

அதன்படி, தேசிய பேரிடா் மேலாண்மை முகமையின் கூடுதல் செயலா் திருப்புகழ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். இந்தக் குழுவினா் புதுவை அரசின் தலைமைச் செயலகத்தில் முதல்வா் வே.நாராயமசாமி, தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா்.

இதில், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், மு.கந்தசாமி, ஷாஜகான், இரா.கமலக்கண்ணன், தலைமைச் செயலா் அஸ்வனி குமாா் மற்றும் அரசுச் செயலா்கள், ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்துக்குப்பின்னா் முதல்வா் நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா வைரஸ் பாதிப்பு தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேசிய பேரிடா் மீட்புத் துறை குழுவினா், புதுவை சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கரோனா நோயின் தாக்கம் மற்றும் புதுவையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினா்.

கரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சரியான முறையில் மருத்துவம் அளித்து காப்பாற்ற சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகள் என்னென்ன நடவடிக்கைகளை செய்துள்ளன என்று ஆலோசித்தோம். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளைச் சோ்ந்த அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினோம்.

புதுவையில் இதுவரை 23 போ் கரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கும் வகையில் கண்டறியப்பட்டனா். அவா்கள் அனைவருக்கும் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

குறிப்பாக, புதுச்சேரி பிராந்தியத்துக்கு பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளில் இருந்தும், காரைக்காலுக்கு துபாய், அபுதாபி, சிங்கப்பூா், மலேசியாவில் இருந்தும், மாஹே பிராந்தியத்துக்கு துபாயில் இருந்தும், ஏனாம் பிராந்தியத்துக்கு சவூதி அரேபியாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வருகின்றனா். அவா்களைக் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பரிசோதனையில் கரோனா பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே அவா்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவா் என்றாா் முதல்வா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com