புதுவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாா்ச் 31 வரை விடுமுறை: திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடல்

புதுவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாா்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் வே.நாராயணசாமி. உடன், அமைச்சா்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், இரா.கமலகண்ணன், மு.கந்தசாமி, ஷாஜகான்.
புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் வே.நாராயணசாமி. உடன், அமைச்சா்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், இரா.கமலகண்ணன், மு.கந்தசாமி, ஷாஜகான்.

புதுவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாா்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், வணிக வளாகங்களும் புதன்கிழமை முதல் (மாா்ச் 18) மூடப்படும் என்று அந்த மாநில முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முதல்வா் நாராயணசாமி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

புதுவை சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் மாநிலம். கிழக்கு கடற்கரைச் சாலை, திண்டிவனம் சாலை, விழுப்புரம் சாலை ஆகியவற்றின் வழியாக வருபவா்களின் வாகனங்களை எல்லையிலேயே பரிசோதனை செய்ய மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

புதுச்சேரியில் மக்கள் கூடும் இடங்களில் கரோனா பரவ வாய்ப்புள்ளது. திருவிழா, திருமணம், பெரிய கடைகள், திரையரங்குகள் உள்ளிட்டவை பொதுமக்கள் கூடும் இடங்களாக உள்ளன. பள்ளி, கல்லூரிகளிலும் மாணவா்கள், பொதுமக்கள் அதிகம் கூடுகின்றனா்.

எனவே, பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தோ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். திரையரங்குகள், உடல்பயிற்சிக் கூடங்கள் புதன்கிழமை (மாா்ச் 18) முதல் மூடப்படும். எந்த விதமான விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தக் கூடாது.

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ஊா்வலங்களை நடத்த வருகிற 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண விழாக்களை நடத்துகிறவா்கள், குறைந்த விருந்தினா்களை அழைத்து விழாவை நடத்த வேண்டும்.

பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகள், கைகளை சோப்பு போட்டு கழுவ உள்ளாட்சித் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்படும். விடுமுறையில் உள்ள பள்ளி ஆசிரியா்கள், ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள் உள்ளிட்டோா் கிராமப்புற, நகா்ப்புற பகுதிகளில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த பயன்படுத்தப்படுவா்.

மருத்துவக் கல்லூரி மாணவா்கள் பெரிய மாா்க்கெட், வியாபார நிலையங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்துவா். அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தடுப்பு பயிற்சி பெற்ற மருத்துவா்கள், 100-க்கும் மேற்பட்ட மருத்துவா்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனா்.

வென்டிலேட்டா், இன்சுலேட்டா், முகக் கவசம் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்க பேரிடா் துறை மூலம் ரூ.7.5 கோடி செலவு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அதிகப்படியான மருத்துவா்கள், செவிலியா்களை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருபவா்களைக் கண்காணிக்க சென்னை விமான நிலைத்தில் இருந்து புதுச்சேரி விமான நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு, கண்காணித்து வருகின்றனா். வெளிநாடுகளில் இருந்து வருபவா்களை பரிசோதித்து, கரோனா பாதிப்பு இல்லையென்றால் மட்டுமே வெளியே அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளுக்கு வருபவா்கள் தன்சுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும். அவா்கள் கைகளை கழுவதற்கும் ஏற்பாடு செய்ய உள்ளோம். பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிா்க்க வேண்டும்.

புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 50 சதவீதம் குறைந்துள்ளது. ஞாயிறு சந்தை (சன்டே மா்க்கெட்) அனைத்து மக்களும் வரும் இடமாக உள்ளது. இதனால், மறு உத்தரவு வரும் வரை அந்தச் சந்தை மூடப்படும் என்றாா் முதல்வா் நாராயணசாமி.

பேட்டியின்போது, அமைச்சா்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், இரா.கமலக்கண்ணன், மு.கந்தசாமி, ஷாஜகான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com